தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் இன்று காலை, கோயம்பேட்டிலிருந்து ஆலந்தூர் வரை மெட்ரோ தொடர்வண்டியில் பயணித்தார்.
பின்னர், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது கட்சியினருடன் ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு வரை மெட்ரோ தொடர்வண்டியில் பயணித்தார்.
ஏதோ இருவரும் பேசி வைத்துப் பயணம் செய்தது போல் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு இருவரும் பயணம் செய்துள்ளனர். இந்தப் பயணம் ஒரு சோதனைப் பயணம் என்பது தெரிகிறது.
மெட்ரோ தொடர்வண்டிப் பயணம் குறித்துக் கேட்டதற்கு ஸ்டாலின், “அரசியல் காரணங்களுக்காக மட்டுமே மெட்ரோ தொடர்வண்டித் திட்டம் தாமதப்படுத்தப்பட்டது. எனினும், இப்போதாவது தொடங்கியது மகிழ்ச்சியே! மெட் ரோ கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. அதைக் குறைக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததும் மெட்ரோ தொடர்வண்டித் திட்டம் விரிவுபடுத்தப்படும். மெட்ரோ தொடர்வண்டிக்கான கட்டணத்தைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
விஜயகாந்த் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.