கோலாலம்பூர், ஜூலை 7 – டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் இனி தன்னை மஇகாவின் தேசியத் தலைவராக அறிவித்துக் கொள்ளக் கூடாது என கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடையுத்தரவு வழங்கியுள்ளதைத் தொடர்ந்து அவரது அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்ற ஆரூடங்கள் பெருகத் தொடங்கியுள்ளன.
மஇகாவின் தேசியத் தலைவராகத் தன்னை அறிவித்துக் கொள்ளக் கூடாது என்றும், கட்சி சார்பாக கூட்டங்கள் நடத்தக் கூடாது, தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடாது எனவும் நீதிமன்ற ஆணையர் (Judicial Commissioner) முகமட் சாக்கி அப்துல் வகாப் நேற்று இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை வழங்கினார்.
அம்பாங் ஜெயா தொகுதியில் உள்ள மஇகா கிளைத் தலைவரான டத்தோ என்.முனியாண்டி (படம்) தொடுத்த இந்த புதிய வழக்கில் நீதிபதி இந்த இடைக்காலத் தடையுத்தரவை வழங்கியுள்ளது, மஇகா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கின் நோக்கம் என்ன?
அந்த வழக்கின்படி, தான் சங்கப் பதிவகத்தின் அதிகாரபூர்வ மஇகா பொறுப்பாளர்கள் பட்டியலைப் பெற்றதாகவும் அதில் இடைக்காலத் தேசியத் தலைவராக டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், இதனால் இனி பழனிவேல் தன்னை மஇகாவின் தேசியத் தலைவராக அழைத்துக் கொள்ளக் கூடாது என்றும், டத்தோ முனியாண்டி ஒரு சார்பு வழக்கை (Ex Parte) நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார்.
அதன்படி, நேற்று விசாரணைக்கு வந்த அவ்வழக்கில் பழனிவேலுவுக்கு எதிராக இடைக்காலத் தடையுத்தரவு வழங்கி மேற்கண்ட தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
“நான் எனது தனிப்பட்ட சக்திக்கு ஏற்ப இந்த வழக்கைத் தொடுத்தேன். காரணம் கட்சியில் என்ன நடக்கிறது என பல உறுப்பினர்கள் குழப்பமடைந்துள்ளனர். ஒரு கிளைத் தலைவராக, நான் ஏதாவது செய்ய வேண்டும். அதனால் தான் இந்த வழக்கை தொடுத்தேன்” என நேற்று பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டத்தோ என்.முனியாண்டி தெரிவித்துள்ளார்.
நீதிமன்றம் சென்றாலும் முனியாண்டி உறுப்பியத்தை இழக்கமாட்டார்
மஇகா வட்டாரங்களில் தற்போது எழுந்துள்ள மற்றொரு கேள்வி மஇகா விவகாரத்தில் நீதிமன்றத்தில் சென்றதால், பழனிவேல், சோதிநாதன் போலவே, முனியாண்டியும் தனது மஇகா உறுப்பியத்தை இழப்பாரா என்பதுதான்.
ஆனால், அவர் அவ்வாறு இழக்கமாட்டார். தான் தொடுக்கப் போகும் வழக்கு குறித்து முறையாக மத்திய செயலவைக்குத் தெரியப்படுத்தி அவர்களின் ஒப்புதலுடன்தான் அவர் வழக்கு தொடுத்திருக்கின்றார் என்பதால், அவர் தனது உறுப்பியத்தை இழக்கமாட்டார்.
இதனை மஇகா அமைப்புவிதியின் பிரிவு 91 தெளிவாகக் குறிப்பிடுகின்றது.
இனி பழனிவேல் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
இந்த வழக்கைப் பொறுத்தவரை, பழனிவேலுவுக்கு இரண்டு சட்ட வாய்ப்புகள் இருப்பதாக சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர்.
ஒன்று, நீதிமன்ற உத்தரவுக்கு அடிபணிந்து, தான் தேசியத் தலைவர் இல்லை என்பதை ஒப்புக் கொண்டு, பின்வாங்கிக் கொள்வது.
இரண்டாவது, இந்த வழக்கை எதிர்த்து மனுத் தாக்கல் செய்வது. அவ்வாறு செய்தால், அவர் நான்தான் இன்னும் மஇகாவின் தேசியத் தலைவர் என்பதை நிரூபிக்க வேண்டும். அதற்குரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
தான் இன்னும் மஇகா தேசியத் தலைவர்தான் என்பதை இந்த வழக்கின் மூலம் நீதிமன்றத்தில் நிரூபிக்க பழனிவேல் முக்கியமாக சங்கப் பதிவகத்தின் உறுதிக் கடிதத்தைப் பெறவேண்டும்.
காரணம், நமது நாட்டின் அரசியல் மற்றும் பொது இயக்கங்களுக்கான இலாகாவான சங்கப் பதிவகம்தான் அதிகாரபூர்வமாக யார், யார் பொறுப்பாளர்கள் என்ற அறிவிப்பைச் செய்ய முடியும்.
இந்நிலையில் பழனிவேல் அவ்வாறு உறுதிக் கடிதத்தை சங்கப் பதிவகத்திடமிருந்து பெற முடியுமா?
நிச்சயம் முடியாது!
வேண்டுமானால், மீண்டும் நீதிமன்றம் சென்று சங்கப் பதிவகம் மீது வழக்கு தொடுக்க முடியும். அந்த வழக்கும் மேலும் சில மாதங்கள் நீடிக்கலாம். அதுவரை அவர் தன்னை தேசியத் தலைவராகப் பிரகடனப்படுத்திக் கொள்ள முடியாது.
ஆக, நீதிமன்றம் சென்றதால் சட்ட சிக்கலை உருவாக்கிய பழனிவேல் அந்த சிலந்தி வலைச் சிக்கலில் தானும் சிக்கிக் கொண்டு, மேலும் சில தலைவர்களையும் சிக்க வைத்துவிட்டார்.
-இரா.முத்தரசன்