Home நாடு “எங்களின் செய்திகள் உண்மையே” – வால் ஸ்ட்ரீட் மீண்டும் வலியுறுத்து!

“எங்களின் செய்திகள் உண்மையே” – வால் ஸ்ட்ரீட் மீண்டும் வலியுறுத்து!

493
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 8 – பிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு 1எம்டிபி தொடர்புடைய நிதிகள் மாற்றப்பட்டது குறித்து தாங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் உண்மைதான் என்பதைத் தாங்கள் மறு உறுதிப்படுத்துவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கையின் பதிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

1MDB Posterவால் ஸ்ட்ரீட்டின் பதிப்பாளர்களான ‘டௌ ஜோன்ஸ்’ (Dow Jones) நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தங்களின் நிருபர் தொடர்பு கொண்டபோது உறுதிப்படுத்தியதாக ஸ்டார் இணைய செய்தித்தளம் தெரிவித்துள்ளது.

13வது பொதுத் தேர்தலுக்கு முன்பாகப் பிரதமரின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு 700 மில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான பணம் 1எம்டிபியின் நிதியிலிருந்து மாற்றப் பட்டதாகக் கடந்த வாரம் வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது.

#TamilSchoolmychoice

ஒரு பெயர் குறிப்பிடப்படாத புலனாய்வாளர் இந்தத் தகவலைத் தங்களுக்குத் தந்ததாகவும் வால் ஸ்ட்ரீட் தெரிவித்தது.

அனைத்துலக வணிக நாளிதழான வால் ஸ்ட்ரீட் தங்களின் செய்திகளின் பக்கம் உறுதியுடன் சார்ந்து நிற்பதாகவும், தங்களின் செய்திகளுக்குத் தங்களிடம் ‘வலுவான ஆதாரங்கள்’ இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Wall Street Journalநேற்று செவ்வாய்க்கிழமை வால் ஸ்ட்ரீட் இது தொடர்பான 9 பக்கங்களைக் கொண்ட ஆவணங்களைத் தனது இணையப் பக்கங்களில் பதிவேற்றம் செய்து வெளியிட்டது. சில நிறுவனங்களிலிருந்து நஜிப்பின் சொந்த வங்கிக் கணக்குகளுக்குப் பணம் எவ்வாறு பரிமாற்றம் செய்யப்பட்டது என்பதை இந்த ஆவணங்கள் எடுத்துக் காட்டின.

இருப்பினும், தனது சொந்த உபயோகத்திற்காகப் பணம் எதனையும் தான் பெறவில்லை என நஜிப் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றார்.

வால் ஸ்ட்ரீட் செய்திகள் தொடர்பாக வழக்குத் தொடுக்கத்  தனது வழக்கறிஞர்களைப் பணித்திருப்பதாகவும் நஜிப் தெரிவித்துள்ளார்.