சென்னை, ஜூலை 8- ஏப்ரல் 25-ஆம் தேதி ரஜினிமுருகன் படத்தின் முதல் பார்வை வெளியீடு, சிங்கப்பூரில் மே 29-ஆம் தேதி‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’பாடலின் single track வெளியீடு, ஜுன் 7-ஆம் தேதி இசை வெளியீடு என்று ஒவ்வொரு விழாவையும் அறிவித்த தேதியில் தவறாமல் செய்து காட்டியிருந்தார் லிங்குசாமி.
மேலும், ஜுலை 17-ஆம் தேதி ‘ரஜினிமுருகன்’ படம் வெளியீடு என அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ரஜினிமுருகன் படம், குறித்த தேதியில் வெளியாகாது எனச் சினிமா உலகில் அரசல் புரசலாகப் பேச்சு எழுந்தது.
இதைக் கேள்விப்பட்ட லிங்குசாமி, இசை வெளியீட்டின் போது ‘ரஜினிமுருகன்’ படத்தின் வெளியீட்டை யாராலும் தடுக்க முடியாது என்று முருகன் மீது ஆணையிட்டுப் பேசினார்.
ஆனால், ஜுலை 17-ஆம் தேதி நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், படத்தை வெளிடுவதற்கான வேலைகளில் ஈடுபடாமல் இருக்கிறார்.
காரணம், ‘உத்தமவில்லன்’ படத்தின் போது எழுந்த அதே பண நெருக்கடிப் பிரச்சினைதான் தற்போதும் எழுந்துள்ளதாகத் தெரிகிறது.
‘ரஜினிமுருகன்’ படம் மற்றொரு எம்ஜிஆர் (மத கஜ ராஜா) என்று வருண்மணியன் ஒருமுறை லிங்குசாமிக்கு எதிராக டிவிட்டரில் பதிவிட்டிருந்தது இங்கே கவனிக்கத்தக்கது.