கோலாலம்பூர் – பல்வேறு காரணங்களால் காலங் கடந்து வந்திருக்கும் ரஜினிமுருகன், சிவகார்த்திகேயனின் அடுத்த படம் என்ற அளவில் தமிழ்த் திரையுலக வட்டாரங்களில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
தாமதித்து வந்தாலும், அனைத்து குடும்பத்தினரும் பார்க்கும் வண்ணம், கதை, வசனங்கள், நடிப்பு, பாடல்கள், என எல்லா அம்சங்களிலும் பொங்கல் வெளியீடுக்கேற்ற கலகலப்பு கலந்து, இரசிகர்களை ஏமாற்றாத வண்ணம் வெளிவந்து, சிவகார்த்திகேயனின் நட்சத்திர அந்தஸ்தை மேலும் உயர்த்தியுள்ளது ரஜினிமுருகன்.
தயாரிப்பாளர் என்ற முறையில், ‘அஞ்சான்’, ‘உத்தமவில்லன்’ படங்களால் நொந்துபோன லிங்குசாமி சந்தோஷமாக இன்றைக்கு பொங்கல் வைக்கலாம். வெளியிடப்படும் தமிழகத்தின் 800 தியேட்டர்களிலும் வசூல் மழையாம்.
கதை, திரைக்கதை
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை எழுதி இயக்கிய பொன்ராம் ஏறத்தாழ அதே குழுவுடன், அதே பாணியில் மீண்டும் களமிறங்கி வெற்றியடைந்திருக்கின்றார்.
நாம் இதுவரை பார்க்காத கதை, கதாபாத்திரங்கள் என்று கூற முடியாது. ஆனால், சம்பவங்கள் புதிதாக இருக்கின்றன. படத்தின் இறுதிவரை, கவர்ச்சி கலக்காமல், வெளிநாட்டுப் பாடல்கள் என வெறுப்பேற்றாமல், கதாநாயகன் என்பதற்காக தேவையில்லாத சண்டைக்காட்சிகள் வைக்காமல், வசனங்கள், சம்பவங்கள், திரைக்கதையை மட்டும் நம்பி படத்தை நகர்த்துகின்றார் இயக்குநர்.
தனது பாரம்பரிய வீட்டை விற்று அந்தப் பணத்தை மகன்களுக்கும், பேரன்களுக்கும் பிரித்துக்கொடுக்க ஏற்பாடு செய்கின்றார் தாத்தா ராஜ்கிரண். ஆனால், சில மகன்களும், பேரன்களும் வெளிநாடுகளில் தங்கியிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் வந்தால்தான் வீட்டை விற்கமுடியும் என்ற நிலைமை.
அதற்காக, அவருக்கு தினமும் சாப்பாடு கொடுத்து அவரை கவனித்துக் கொள்ளும் வேலையில்லாத, ஊர்சுற்றி பேரன் சிவகார்த்திகேயனோடு சேர்ந்து என்ன சுவாரசியமான திட்டம் போடுகிறார் ராஜ்கிரண் என்பது படத்தின் ஒரு கிளைக் கதை.
இன்னொரு கிளைக் கதையிலோ, கீர்த்தி சுரேஷை சிறு வயதிலிருந்தே காதலிக்கின்றார் சிவகார்த்திகேயன். ரஜினியின் இரசிகர்களாக இளமையில் உலா வரும் சிவகார்த்திகேயனின் தந்தை சம்பந்தனும், கீர்த்தி சுரேஷின் தந்தையும் ஒரு வாய்த் தகராறில் நிரந்தரமாகப் பிரிந்து விடுகின்றனர்.
சிவகார்த்திகேயனுக்கு கீர்த்தியை கட்டிக் கொடுக்க மாட்டேன் என்று கூறி கீர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கின்றார் அவரது தந்தை.
எல்லாவற்றையும் மீறி சிவகார்த்திகேயன் கீர்த்தியை விரட்டி விரட்டி காதலிக்க, இறுதியில் அவரது காதல் வலையில் விழுகின்றார் கீர்த்தி. அவர்கள் காதல் நிறைவேறியதா என்பது படத்தின் இன்னொரு பகுதி
படத்தின் வில்லன் ஏழரை மூக்கன் என்ற சமுத்திரகனி. ஊர் முழுக்க பணக்காரர்களை வளைத்து அவர்களிடமிருந்து பணம் பிடுங்கும் குரூர மனம் கொண்ட தாதா.
ஒரு கட்டத்தில் ராஜ்கிரணின் வீட்டில் தனக்கும் சொந்தம் இருக்கின்றது என்று பொய் சொல்லி, கதைக்குள் நுழைகின்றார் சமுத்திரகனி. அவரை சிவகார்த்திகேயனும், ராஜ்கிரண் குடும்பத்தினரும் எப்படி சமாளிக்கின்றார்கள் என்பது மற்றொரு பகுதி. இந்த மூன்றையும் குழப்பமில்லாமல் தெளிவாக ஒன்றிணைத்து, இறுதி வரை கலகலப்பான திரைக்கதையை அமைத்திருக்கின்றார் இயக்குநர்.
படத்தின் ஊடே, ரஜினிமுருகன் பெயருக்கேற்ப ரஜினியை நன்றாக பயன்படுத்தியிருக்கின்றார்கள். படத்தின் ஆரம்பத் தலைப்புகளிலேயே ரஜினிக்கு மறக்காமல் நன்றியும் போட்டிருக்கின்றார்கள்.
படத்தின் பலம் – சுவாரசியங்கள் # 1 சிவகார்த்திகேயன் – சூரி கூட்டணி
படத்தின் முதுகெலும்பே சிவகார்த்திகேயன்தான். அவருடன் சேர்ந்து கலக்குகின்றார் சூரி. இறுதிவரை இந்தக் கூட்டணி படம் பார்க்க வந்தவர்களை போரடிக்க வைக்காமல், சிரிப்பலையில் மிதக்க வைத்திருக்கின்றது.
ரஜினிக்கு அடுத்து யார் என திரையுலகமே விவாதித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அந்த இடத்தை அலுங்காமல், குலுங்காமல், சிவகார்த்திகேயன் சத்தமில்லாமல் உள்ளே நுழைந்து பிடித்து அழுத்தமாகக் கால் பதித்து விடுவார் போல் தெரிகின்றது.
இயல்பான நகைச்சுவை வசனங்களைத் தெறிக்க விடுவதாகட்டும், சண்டைக் காட்சிகளில் காட்டும் ஆக்ரோஷம், காதல் செய்யும் இலாவகம், நடனத்தில் பின்னி எடுப்பது என ஒரு சினிமா சூப்பர் ஹீரோவுக்கான அத்தனை அம்சங்களிலும் – அந்தக் கால ரஜினி பாணியில் கலக்குகின்றார்.
அடுத்த ரஜினியா அவர்? காலம்தான் விடை கூறவேண்டும்!
படத்தின் பலம் – சுவாரசியங்கள் # 2 காலத்துக்கேற்ற கருத்துகள்
படத்தின் ஊடே, அப்பாக்களையும், தாத்தாக்களையும் மகன்கள் கவனிக்காதது, வெளிநாடு போனவர்களால் ஏற்படும் பிரச்சனைகள், வெளிநாட்டுக் குழந்தைகள் தமிழ் படிக்காதது, ஒரு முதியவரின் இறுதிக் காலத்தில் அவர் எதிர்நோக்கும் சொத்துப் பிரச்சனைகள், பாரம்பரிய வீட்டை தற்காப்பது, என்பது போன்ற பல கருத்தான அம்சங்களையும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் மனதில் தைக்கும் வண்ணம் செருகியிருக்கின்றார் இயக்குநர்.
மதுரை மண்ணின் மணத்தை ஊர்ப் பஞ்சாயத்து மூலம் காட்டியிருப்பது வழக்கமானது என்றாலும், இதில் வரும் இறுதிக் ‘கட்ட’ பஞ்சாயத்துகள் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கின்றன.
வாழைத்தாரிலிருந்து ஒரு வாழைப் பழத்தை உரித்தெடுக்க ஒருவர் மதுரை மண்ணிற்கே உரிய கெத்துடன் வசனம் பேசி இழுப்பது திரையரங்கையே குலுங்க வைக்கின்றது.
ஒளிப்பதிவு-படத் தொகுப்பு-இசை
வண்ணமயமான ஒளிப்பதிவு தந்திருப்பவர் பாலசுப்ரமணியெம். படத் தொகுப்பும் விறுவிறுப்பு குறையாமல் செல்கின்றது.
கவரும் மற்றொரு அம்சம் பாடல்களும் அவை படமாக்கப்பட்டிருக்கும் விதமும். வழக்கமான காதல் பாடல்கள் போல் இல்லாமல், பாடல் காட்சிகளோடு காதலையும், கதையையும் நகர்த்தியிருக்கின்றார்கள். அவர்களுக்குப் பக்கத்துணை இசையமைப்பாளர் டி.இமான்.
‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா”-வில் ஆரம்பித்து, ‘உன்மேலே ஒரு கண்ணு’ என்ற மெல்லிசைப் பாடல், திருவிழாப் பாடல்கள் என இரசிகர்களைத் துள்ளி ஆட வைத்திருக்கின்றார் இமான்.
தேநீர்க்கடை நடத்தும் சிவாவும், சூரியும் இடையிடையே பொருத்தமான பழைய சினிமாப் பாடல்களைப் போடுவது கவரும் இன்னொரு அம்சம்.
நடிப்பு
சிவகார்த்திகேயன், சூரியைப் பற்றி ஏற்கனவே சொல்லியாகிவிட்டது.
படத்தைத் தூக்கி நிறுத்தும் மற்றொருவர் கீர்த்தி சுரேஷ். கவர்ச்சியோ, கதாநாயகனுடன் நெருக்கமோ காட்டாமல், கண்களாலும், உதட்டுச் சுழிப்புகளினாலும், சிரிப்பினாலும் அசத்துகின்றார். முன்னாள் நடிகை மேனகாவின் மகள். அம்மாவின் மலையாள அழகு பாரம்பரியமாக தொடர்ந்து கீர்த்தியிடம் ஒட்டிக் கொண்டிருக்கின்றது. தொழிலில் கவனம் செலுத்தினால், தமிழ்த் திரையுலகின் அடுத்த சூப்பர் ஹீரோயின் இவர்தான்.
ராஜ்கிரண், சம்பந்தன், என படத்தில் வரும் பல கதாபாத்திரங்களும் சிறப்பாகவே நடித்திருந்தாலும், படத்தின் எதிர்பாராத இணைப்பாக வந்து அனைவரையும் கவர்பவர் கீர்த்தியின் அப்பாவாக வரும் நடிகர். எங்கு தேடியும் பெயர் அகப்படவில்லை.
அப்பாவாக மிடுக்கு, கண்டிப்பு, சம்பந்தனிடம் நட்பு பாராட்டுவது, ரஜினி ஸ்டைலில் முடியை வைத்துக் கொண்டு அதே போல அடிக்கடி கோதிவிடுவது, அவ்வப்போது தனது நிலைமையைச் சொல்ல ரஜினியின் வசனங்களைப் போட்டுக் காட்டுவது எனப் பின்னுகின்றார். தமிழ்ப்படங்களுக்கு இன்னொரு புது அப்பா!
சமுத்திரகனியைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. மதுரைக்கார கெத்தையும், வில்லத்தனத்தையும் கண்முன்னே நிறுத்துகின்றார். அவரது மதுரைக்கார கெத்தையும், திமிரையும் அதே மதுரை மண்ணின் பாரம்பரியம் கொண்டு அடக்குவது, படத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சம். இறுதியில் கூட தனது சுபாவத்தை விட்டுக் கொடுக்காமல் அடிவாங்கிய பின்னரும் அதே கெத்துடன் வெளியேறுவதில் சமுத்திரகனியின் நடிப்பு முத்திரை தெரிகின்றது.
இப்படி எல்லா முனைகளிலும் பொங்கல் குதூகலத்துக்கு ஏற்ற விருந்தாக, கலகலப்பும், தித்திப்பும் கலந்து உருவாகியிருக்கும் ‘ரஜினிமுருகன்’ அனைவரும் தவறாமல் பார்த்து மகிழவேண்டிய படம்!
-இரா.முத்தரசன்