சென்னை, ஜூலை 8- சென்னையைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு மீதான விசாரணையில், தமிழகத்திலுள்ள ‘டாஸ்மாக்’ மதுக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களின் நச்சுத்தன்மை குறித்து ஆய்வு செய்து, ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேவராஜ் தக்கல் செய்த பொதுநல வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
தேவராஜ் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களில் அதிகளவு நச்சுத்தன்மை உள்ளதாகவும், அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும். ஆகையால் டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுபானங்களில் கலந்துள்ள நச்சின் தன்மையைக் கண்டறிய வேண்டுமென்றும் வாதிட்டார்.
இதற்கு டாஸ்மாக் நிர்வாகம், மதுபானங்களில் கலந்திருக்கும் நச்சுத்தன்மை குறித்த விவரங்கள் ஏதும் தம் வசம் இல்லை என்று பதிலிறுத்தது; மத்திய அரசுத் தரப்பிலும் விவரம் இல்லை எனக் கூறியது.
எனவே, இதைத்தொடர்ந்து, இதுகுறித்து ஒரு மாதத்திற்குள் ஆய்வு செய்து அறிக்கைத் தாக்கல் செய்ய டாஸ்மாக் நிர்வாக மேலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.