Home கலை உலகம் சிலம்பரசனின் வாலு திரைப்படத்திற்குத் தடை!

சிலம்பரசனின் வாலு திரைப்படத்திற்குத் தடை!

505
0
SHARE
Ad

21-vaalu-movie-simbu-hansika--சென்னை, ஜூலை 9- நடிகர் சிம்பு நடித்த வாலு திரைப்படத்திற்குத் தடை விதித்துச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது, வாலு படக்குழுவினருக்கு எதிர்பாராத அதிர்ச்சியைத் தந்துள்ளது. ஏற்கனவே பல சிக்கலில் சிக்கித் தவித்து இப்போதுதான் ஒருவழியாய் வெளி வரத் தயாரானது வாலு.

கடந்த மூன்று வருடங்களாகத் தயாரிப்பிலேயே இருந்த வாலு படத்தைத் தன் மகன் சிம்புவுக்காக டி.ராஜேந்தர் தானே தனது சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் வாங்கி வெளியிடவிருந்தார்.

#TamilSchoolmychoice

ஆனால், இப்போதோ அதற்கும் பிரச்சினை வந்திருக்கிறது.

வாலு திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்ஐசி ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி, அப்படத்தின், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட நான்கு மாநில வெளியீட்டு உரிமையை மேஜிக் ரேய்ஸ் என்ற நிறுவனத்திற்கு ரூ.10 கோடிக்கு 2013-ல் ஒப்பந்தம் செய்து விற்றதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அதை மீறித் தற்போது வேறு நபர் மூலமாக அப்படத்தை வெளியிட முயல்வதாக மேஜிக் ரேய்ஸ் நிறுவனம் வழக்குத் தொடுத்துள்ளது.

எனவே தன்னைத் தவிர வேறு நபர் மூலமாக வாலு படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் தயாரிப்பாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.

இதையடுத்து, வரும் 13-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்த நீதிமன்றம் அதுவரை திரைப்படத்தை வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

வாலு படம் அனுமன் வால் மாதிரி நீளும் என்று டி.ஆரே சொன்னது இப்போது நிதர்சனமாகி வருகிறது.