Home நாடு மஇகா வேட்புமனுத் தாக்கல்: எல்லாக் கிளைகளும் பங்கு பெற்று ஒற்றுமையை வலுப்படுத்துவோம் – வி.எஸ்.மோகன் அழைப்பு

மஇகா வேட்புமனுத் தாக்கல்: எல்லாக் கிளைகளும் பங்கு பெற்று ஒற்றுமையை வலுப்படுத்துவோம் – வி.எஸ்.மோகன் அழைப்பு

747
0
SHARE
Ad

V.S.Mohanகோலாலம்பூர், ஜூலை 9 – ம.இ.காவின் இடைக்காலத் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அறிவித்துள்ளதன் படி, ஜூலை 10-ம் தேதி தொடங்கவுள்ள மஇகா கிளைத்தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் குறித்து ம.இ.கா தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ வி.எஸ்.மோகன் (படம்) இன்று வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கை பின்வருமாறு:-

“ம.இ.காவின் இடைக்காலத் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தலைமையில் ஆர்.ஓ.எஸ் எனும் சங்கப் பதிவிலாகா விதித்த உத்தரவுகளின்படி எதிர்வரும் ஜூலை 10,11,12ஆம் தேதிகளில் ம.இ.காவின் கிளைத் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறவுள்ளது.”

“இந்த வேட்பு மனுத்தாக்கல் ம.இ.காவின் எதிர்காலத்திற்கும் இந்திய சமுதாயத்தின் நலனிற்கும் எவ்வளவு முக்கியம் என்பதை ம.இ.கா உறுப்பினர்கள் அனைவரும் இந்த வேளையில் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். இந்தக் காலக்கட்டம்தான் ம.இ.காவில் ஒற்றுமையை வலுப்பெறச் செய்வதற்கும், அடிமட்ட உறுப்பினர்கள் தொட்டு உயர்மட்ட தலைவர்கள் இடையில் பரஸ்பர உறவினை மேம்படுத்துவதற்கும், ம.இ.காவிற்கும் இந்திய சமூகத்திற்கும் உள்ள இடைவெளியைக் குறைப்பதற்கும் கிடைத்திருக்கும் ஓர் அரிய வாய்ப்பாகும்.”

#TamilSchoolmychoice

“டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் நடைபெறும் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்வதன் வழி ம.இ.காவின் அடிப்படைச் சட்டதிட்டங்களை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும். டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் ஆரம்பத்திலிருந்தே ம.இ.கா, ஆர்.ஓ.எஸ், நீதிமன்றம் என அனைத்துத் தரப்புகளின் சட்டத் திட்டங்களையும் பின்பற்றி அதன் அடிப்படையில் இந்தத் தேர்தலை நடத்தவிருக்கின்றார். இதன்வழி ம.இ.காவில் நாம் புதிய மலர்ச்சியைக் காண முடியும் என்பதில் எவ்வித ஐயப்பாடுகளும் இல்லை.”

“ஆனால், தொடக்கம் முதல் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீஜி.பழனிவேலுவின் கீழ்க்காணும் சட்டத்திற்கு முரண்பாடான நடவடிக்கைகளால் தான் கட்சி இத்தகைய சீர் குலைவுக்கும், பின்னடைவுக்கும் உள்ளாகியுள்ளது:-

  • பிரதமர் கூறிய ஆலோசனைகளைப் புறக்கணித்தது
  • சமரசப் பேச்சுவார்த்தைகளைப் புறந்தள்ளியது, புறக்கணித்தது
  • பதிவு இலாகா வழங்கிய ஆலோசனையைப் பின்பற்றாமல் அத்துமீறி நடந்தது
  • பேச்சுவார்த்தைகள் மூலம் பேசித் தீர்த்துக் கொள்ள வாய்ப்புகள் இருந்தும், பதிவு இலாகாவை வழக்குத் தொடுத்து நீதிமன்றத்திற்கு இழுத்தது
  • நமது கட்சி ஆளும் தேசிய முன்னணி அரசாங்கத்தில் ஓர் அங்கம் என்பதை உணர்ந்திருந்தும். உள்துறை அமைச்சரையும் ஒரு பிரதிவாதியாக வழக்கில் சேர்த்தது (உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி தனது பதவி அதிகாரத்தின் மூலம் மஇகாவில் பேச்சுவார்த்தைகள் வழியாகச் சுமுகமாகப் பிரச்சனைகள் தீர்க்கப்பட மட்டுமே உதவினார் என்பதும் பழனிவேலுவே அளித்த திட்டங்களைச் செயல்படுத்த மட்டுமே முனைந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது)
  • 2013-ம் ஆண்டு நடைபெற்ற கட்சித் தேர்தல்களின் முறைகேடுகள் குறித்த புகார்களை முற்றாக ஏற்க மறுத்தது
  • 2009-ம் ஆண்டுக்கான மத்தியச் செயலவை மறுதேர்தலை நடத்துவதை ஏற்க மறுத்தது
  • சீராய்வு மனு என்ற பெயரில் பதிவு இலாகா முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது
  • பல முறை அந்த வழக்கு ஒத்தி வைப்பால் ஏற்பட்ட இழுத்தடிப்பால், கட்சியின் செயல் நடவடிக்கைகள் மந்தமானது, முடங்கிப் போனது.
  • அதனைத் தொடர்ந்து வழக்கு தோற்றுப் போனப் பிறகும் மேல்முறையீடு செய்தது.
  • 2009-ம் ஆண்டுக்கான மத்திய செயலவை கிளைத் தேர்தலை நடத்துவதற்கு எதிராகத் தடையுத்தரவு கோரி வழக்குத் தொடுத்து அதிலும் தோற்றுப்போனது
  • தெளிவான தீர்ப்புக்குப் பின்னரும் அந்த நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகத் தடையுத்தரவு கோரி, அதிலும் தோல்வி கண்டது.
  • நீதிமன்றத் தீர்ப்புகளுக்குப் பின்னரும் நானே தேசியத் தலைவர் என்று கூறிக் கொண்டு, கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கல்களை அறிவித்தது – கிளைகளுக்கான தேர்தல் தேதிகளை அறிவித்தது.
  • பழனிவேல் இனி தேசியத் தலைவராகச் செயல்பட முடியாது என டத்தோ என்.முனியாண்டி இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றைப் பெற்ற பின்னரும், தொடர்ந்து கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் குறித்த அறிக்கைகளை டத்தோ சோதிநாதன் மூலமாக விடுத்துக் கட்சியில் குழுப்பங்களை ஏற்படுத்தியது.”

பழனிவேல் மஇகா உறுப்பியத்தை ஏன் இழந்தார்?

Palanivel MIC President

“30ஆண்டுகளுக்கு மேல் கட்சியில் இருந்த பழனிவேல், 2009ஆம் ஆண்டு மத்தியச் செயலவையின் அனுமதியின்றி தனிப்பட்ட முறையில் கட்சியை நீதிமன்றத்திற்குச் கொண்டு சென்ற காரணத்தால் ம.இ.கா விதி 91கீழ் உறுப்பியத்தை இயல்பாகவே இழந்து விட்டார். இருந்தபோதிலும் தான் இன்னும் தேசியத் தலைவர் என்ற அதிகாரத்தோடு பல குழப்பங்களையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.”

“தான் கட்சி உறுப்பியத்தை முழுமையாக இழந்துவிட்டதை நன்கு அறிந்திருந்தும் முன்னுக்குப் பின் முரணாக 2009-ம் ஆண்டுக்கான மத்தியச் செயலவை நிர்வாகத்தை மீண்டும் ஏற்றுக்கொண்டது – அதே நேரத்தில், நீதிமன்றத்தில் (2009) மத்தியச் செயலவையை ஏற்க மறுத்து மேல்முறையீடு செய்தது – எனச் சட்டத்திட்டங்களை எவ்வளவு புறக்கணித்து ம.இ.காவுக்குத் துரோகம் இழைக்க முடியுமோ அந்த அளவுக்கு அனைத்தையும் செய்து விட்டார்.”

“ம.இ.காவில் சட்டதிட்டங்களை உருவாக்கியதே ம.இ.கா உறுப்பினர்கள்தான். அந்தச் சட்டதிட்டங்களை ம.இ.கா உறுப்பினர்களே கடைப்பிடிக்கவில்லையென்றால் ம.இ.காவில் சட்டதிட்டங்கள் எதற்கு? இந்தியச் சமுதாயத்திற்கு எப்படி ம.இ.கா மீதும் ம.இ.கா உறுப்பினர்கள் மீதும் நம்பிக்கை வரும்.”

“ம.இ.கா தற்போது இரண்டு பிரிவுகளாக இருப்பதாகப் பழனி தரப்பினர் ஒரு சூழ்நிலையை உருவாக்கி வைத்துள்ளனர். உண்மையில் ம.இ.காவில் எவ்விதப் பிளவுகளும் இல்லை. எந்தவொரு ம.இ.கா உறுப்பினர்களும் தனிப்பட்டு நான் சுப்ராவின் பக்கம், பழனியின் பக்கம் என்று பிரியவில்லை. ஆனால், பெரும்பான்மை உறுப்பினர்கள் அனைவரும் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அவர்களின் தலைமைத்துவம் பக்கம் அணிதிரண்டு நிற்கின்றனர்.”

“அதுவே ம.இ.காவில் தற்பொழுதுள்ள உண்மை நிலை ஆகும். ஒரு சிலர் மட்டும் தங்களின் சுய தேவைகளுக்காகவும் சுய நலத்திற்காகவும் பழனிவேல்தான் தலைவர் என்று கூறி கட்சியினரைக் குழப்பி வருகின்றனர். மேலும், இரண்டு இடத்திலும் வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என்று பேசி குழப்பி வருகின்றனர். இது ஒரு சிலரின் சுயநலப் போக்கால் விளைந்திருக்கும் குழப்பமே தவிர ம.இ.காவில் பிளவு, பிரிவு என்று எதுவுமே கிடையாது.”

“ஒரு கட்சிக்கு ஒரு தேர்தல்தான். ஒரு தேர்தலுக்கு ஒரு வேட்புமனுதாக்கல்தான் இருக்க முடியும். அந்த ஒரு வேட்புமனுத்தாக்கல் என்பது ம.இ.காவின் சட்டவிதிகளுக்கும், ஆர்.ஓ.எஸ். முடிவிற்கும், நாட்டின் சட்டதிட்டத்திற்கும் உட்பட்டு டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் நடக்கவிருக்கும் தேர்தல்தான் என்பதில் நாம் அனைவரும் ஒருமித்த உறுதியோடு இருக்க வேண்டும்.”

“டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தலைமையில் நடக்கும் தேர்தலில் எல்லாத் தலைவர்களும் ஒன்றிணைந்து எவ்விதச் சஞ்சலமும் இன்றி வேட்புமனுத்தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதன் வழியே ம.இ.காவிற்கு ஒன்றரை ஆண்டு காலமாக ஏற்பட்ட களங்கத்தைத் துடைத்து இந்தியச் சமுதாயத்தின் நம்பிக்கையைப் பெற முடியும். இந்நாட்டில் வாழும் இந்தியச் சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு இதுவே சிறந்ததொரு தீர்வாகும்.”

“குறிப்பிட்ட நாளில் வேட்புமனுத் தாக்கல் செய்யாமல் பின்வாங்கி, சமுதாயச் சீரழிவுக்கு நாமே காரணமாகி விடக்கூடாது. இந்த வேட்புமனுத்தாக்கலின் வழியாகவே ம.இ.காவில் ஒற்றுமை இன்னும் குறையவில்லை என்பதை உறுப்பினர்களாகிய நாம் நிரூபிக்க முடியும். அதுவே நமது கடமையும் ஆகும்.” இவ்வாறு டத்தோ வி.எஸ்.மோகன் தனது பத்திரிக்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.