கோலாலம்பூர், ஜூலை 14 – கூகுள் நிறுவனம் தனது ‘ஃபோட்டோஸ்’ (Photos) செயலியை கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தியது. கணக்கற்ற புகைப்படங்களை வரிசைப்படுத்தவும், அவற்றின் தரத்தை மெருகேற்றவும், தேவைப்பட்டால் அதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளவும் பயன்படுத்தப்படும் இந்த சேவை பற்றி தொடர்ந்து புகார் வந்த வண்ணம் உள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கருப்பினத்தைச் சேர்ந்த அமெரிக்கர் இருவரைஇந்த செயலி ‘கொரில்லா’ என்று டேக் செய்தது. இந்நிலையில், தற்போது எழுந்துள்ள புகாரில், அண்டிரொய்டு திறன்பேசிகளில் கூகுள் ஃபோட்டோஸ் செயலி நீக்கினாலும் (Uninstall), திறன்பேசியில் இருக்கும் புதிய புகைப்படங்களை தொடர்ந்து பேக்-அப் செய்வதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பிஸ்ஜர்னல் செய்தி நிறுவனத்தின் உதவி செய்தி ஆசிரியர் வெளியிட்டுள்ள தகவலில், “கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது திறன்பேசியில், கூகுள் ஃபோட்டோஸ் செயலியை நீக்கினேன். அதன் பின்னர் சில காலம் கழித்து மீண்டும் அதனை ‘இன்ஸ்டால்’ (Install) செய்கையில், இடைப்பட்ட காலத்தில் நான் எடுத்த புகைப்படங்களையும் சேமிப்பில் வைத்துள்ளது. இது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. அதாவது, ஃபோட்டோஸ் செயலியை நீக்கி இருந்தாலும், மேம்படுத்தி இருந்தாலும் எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் கூகுள் நிறுவனத்தின் காதுகளை எட்டி உள்ளது. இது தொடர்பாக ஆராய்ந்து வரும் கூகுள் நிறுவனம், பயனர்கள் அண்டிரொய்டு திறன்பேசிகளில் பேக்-அப் தேர்வை செயல்நீக்கவில்லை என்றால் இத்தகைய பிரச்சனைகள் ஏற்படலாம். எனினும், இந்த விவகாரம் தொடர்பாக ஆராய்ந்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.
கூகுள் ஃபோட்டோஸ் செயலியை பயன்படுத்தும் பயனர்கள் இது தொடர்பாக ஆராய்ந்து கொள்வது நல்லது. ஏனெனில், எதிர்பாராத விதமாக பொதுஊடகங்களில் உங்கள் புகைப்படங்கள் வெளியாகவும் வாய்ப்புள்ளது.