Home இந்தியா வெளிநாட்டுப் பயணிகளை அதிகம் ஈர்த்த மாநிலம் கோவா அல்ல தமிழ்நாடு தான்!

வெளிநாட்டுப் பயணிகளை அதிகம் ஈர்த்த மாநிலம் கோவா அல்ல தமிழ்நாடு தான்!

750
0
SHARE
Ad

tamilnadu-tourismபுது டெல்லி, ஜூலை 26 – இந்திய அளவில் வெளிநாட்டுப் பயணிளை அதிகம் ஈர்த்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக தேர்வு செய்யப்படும் கோவா, கேரளா போன்ற சுற்றுலாத் தளங்களை பின்னுக்குத் தள்ளி தமிழகம் முதலிடம் பிடித்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இது தொடர்பாக வெளியான ஆய்வறிக்கையில், கடந்தாண்டு மட்டும் தமிழகத்திற்கு 46 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலாத் தளங்களுள் ஒன்றான கோவா பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கேரளம் ஏழாம் இடத்தில் உள்ளது.

தமிழ்நாடு, இந்த பட்டியலில் முதல் இடம் பெற்றதற்கான காரணம் பற்றி தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் கூறுகையில், “கொடைக்கானல், ஏற்காட்டில் கோடை விழா, உதகையில் மலர்க் கண்காட்சி, குற்றாலத்தில் சாரல் திருவிழா என ஒவ்வொரு மாவட்டத்திலும் சுற்றுலாத் துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து பல்வேறு விழாக்களை நடத்தி வருகின்றன. இதன் பலனாகத்தான் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வெளிநாட்டுப் பயணிகள் மட்டுமல்லாமல் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதிலும் அதிக அக்கறை செலுத்தி வருகின்றோம். இவை அனைத்திற்கும் தமிழக முதல்வரின் முனைப்பான செயல்பாடுகளே காரணம்” என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த பட்டியலில் கோவா பின்னதங்கியதற்கான காரணங்கள் பற்றி சுற்றுலாத் துறை ஆர்வலர்கள் கூறுவது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. கடற்கரை மாநிலமான கோவாவிற்கு, குட்டி ரஷ்யா என்ற பெயரும் உண்டு. அந்த அளவிற்கு ரஷ்ய நாட்டினர் கோவாவிற்கு அதிகம் விரும்பி வருகை புரிந்து வந்தனர். இந்நிலையில், ரஷ்யாவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் ரஷ்யப் பயணிகளின் வரத்து குறைந்துவிட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், சட்டம் – ஒழுங்கு பிரச்சனையும் பெருகி வருவதாகக் கூறப்படுகிறது.

கணக்கீடுகளின் படி, கடந்த 2013-ம் ஆண்டு, கோவாவிற்கு 4.9 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர். 2014-ல் இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தாலும், மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் கோவா தனது வசீகரத்தை இழந்து வருவதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.