திருநெல்வேலி, ஆகஸ்டு 3–மதுக்கடைகளை அகற்றக்கோரிக் கலிங்கப்பட்டியில் மதிமுக தலைவர் வைகோ தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்ளைக் காவல்துறையினர் தடியடி நடத்தியும் கண்ணீர்ப் புகைக் குண்டையும் வீசியும் கலைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது.இதில் பலர் காயமுற்றனர்.
இதற்கு வைகோ தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.மேலும், தன்னைக் கொலை செய்ய முயற்சி நடப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து வைகோ கூறியுள்ளதாவது: “நேற்று நடந்த போராட்டத்தில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது தமிழக அரசும் காவல்துறையினரும் தான்.
நேற்று 10 கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டதில் 7 குண்டுகள் என்னைக் குறி வைத்தே வீசப்பட்டன.துப்பாக்கி சூடு நடத்தும் போதும் என்னைக் குறி வைத்துள்ளனர்.காவல்துறையினர் என்னைக் கொலை செய்ய முயற்சிக்கின்றனர்.
என்னைக் கொலை செய்ய முயன்றாலும், என் மீது பொய் வழக்குகள் போட்டாலும் போராட்டத்திலிருந்து பின் வாங்கப் போவதில்லை.நாளை மதுவுக்கு எதிராக நாங்கள் நடத்தும் முழு அடைப்புப் போராட்டம் திட்டமிட்டபடி நடந்தே தீரும்”என்று ஆவேசமாகக் கூறினார்.