கோலாலம்பூர், ஆகஸ்ட் 3 – பிரதமராகப் பதவி வகித்த 22 ஆண்டு காலத்தில், தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு நன்கொடை என்ற பெயரில் எந்த ஒரு பணப் பரிமாற்றமும் நிகழவில்லை என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
பொதுப் பணத்தை தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பரிமாற்றம் செய்து பொதுத்தேர்தல்களுக்கு செலவு செய்ததாக தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை அடிப்படை ஆதாரமற்றது என மகாதீர் விமர்சித்துள்ளார்.
தான் அம்னோ தலைவராக இருந்த காலத்தில், நன்கொடைகளுக்கென்றே உள்ள வங்கிக் கணக்கை, குறிப்பாக தேர்தலுக்கான நிதிகளை நிர்வகிக்கும் மூன்று அறங்காவலர்களில் ஒருவராக இருந்ததாகவும் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.
“என்னுடன் சேர்ந்து அந்த இரண்டு அறங்காவலர்களும் அந்த வங்கிக் கணக்கை நிர்வகிக்கும் பொறுப்பைக் கொண்டிருந்தோம். அந்தக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதாக இருந்தால் மூன்று பேரும் காசோலையில் கையெழுத்திட வேண்டும். அந்த அறங்காவலர்கள் அம்னோவின் பங்குகளுக்கும், சொத்துகளுக்கும் உரிமையாளர்கள் என பெயரிடப்பட்டிருந்தது.”
“எனவே நான் பதவி விலகும் பொழுது, 200 மில்லியன் ரிங்கிட் பணத்தையும், 1.2 பில்லியன் ரிங்கிட் சொத்துக்களையும் துன் அப்துல்லா அகமட் படாவியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டேன்” என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தலுக்காக எந்த ஒரு பணமும் எனது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படவில்லை என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.
கடந்த 1970-ம் ஆண்டு அம்னோவில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் குறித்து பேசியுள்ள மகாதீர், 20,000 ரிங்கிட் காசோலையை தான் கணக்கில் அறிவிக்கவில்லை என்று கூறி இண்லேண்ட் ரெவன்யூ போர்டு தனது வீடு மற்றும் மருந்தகத்தை சோதனை நடத்தி தனக்கு 130,000 ரிங்கிட் அபராதம் விதித்ததாகவும் மகாதீர் தெரிவித்துள்ளார்.
“1964 மற்றும் 1969 ஆண்டு தேர்தல்களில், என்னுடைய நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு வழங்கும் படி தலைமையகத்தில் இருந்து 20,000 ரிங்கிட் வழங்கப்பட்டது. அப்போது அது பெரிய தொகை என்பதால் எனது வங்கிக் கணக்கில் அதை செலுத்தி, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல் குழுவிற்கு காசோலையாக வழங்கினேன்”
“அந்தப் பணம் நன்கொடை கிடையாது ஆனால் அது தேர்தல் வேட்பாளர்களுக்காக அம்னோ அளித்த பணம்” என்று மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.
கிட்டத்தட்ட எல்லா தேர்தல்களிலும் நாடாளுமன்றங்களில் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்ற போதிலும், அதற்காக பணம் செலவழித்தது என்பது அரிதான ஒன்றும் என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.
“ஒருவேளை, தற்போது அம்னோவிற்கு 2.6 பில்லியன் நிதி தேர்தல்களுக்காக தேவைப்படுவதாக இருந்தால், அது தேர்தல் சட்டத்திற்குப் புறம்பானது. எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்பதற்கு வரமுறை உள்ளது” என்று கூறியுள்ள மகாதீர், ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தலுக்கு எவ்வளவு செலவு ஆனது என்பதை அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
1எம்டிபி விவகாரத்தில், தலைமை கணக்காய்வாளர் மற்றும் பொதுக் கணக்கு குழுவின் அறிக்கைக்காக தான் காத்திருப்பதாகவும் மகாதீர் தெரிவித்துள்ளார்.