கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 – கடந்த ஜூலை 23ஆம் தேதி செல்லியலில் “மஇகா வேட்புமனுத் தாக்கல் – மேல்முறையீடு கால அவகாசத்தால் கட்சிக்கு திரும்பிய முக்கியத் தலைவர்கள்!” என்ற தலைப்பின் கீழ் செய்தி ஒன்று இடம்பெற்றிருந்தது.
அந்த செய்தியில், டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பில் தீவிரமாக இயங்கிவந்த சில தலைவர்கள் மஇகா தலைமையகம் நடத்திய வேட்புமனுத் தாக்கலில் பங்கு பெற்றிருப்பதாகவும், அதைத் தொடர்ந்து மஇகா தலைமையகம் வழங்கிய கால அவகாச வாய்ப்பைப் பயன்படுத்தி மேல்முறையீடு செய்திருப்பதாகவும் வெளியிடப்பட்ட செய்தியில் இடம் பெற்றிருந்த தலைவர்களின் பட்டியலில் மஇகாவின் முன்னாள் தலைமைப் பொருளாளர் டத்தோ எஸ்.முருகேசனின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
ஆனால், பின்னர் தீர விசாரித்ததில், மஇகா தலைமையகத்தின் வேட்புமனுத் தாக்கலில் டத்தோ முருகேசன் பங்கு பெறவில்லை என்பதும், மேல்முறையீடு எதுவும் செய்யவில்லை என்பதும் எங்களுக்குத் தெரிய வந்துள்ளது.
செல்லியலுக்கு அப்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பதிவிடப்பட்ட இந்த செய்தியில் டத்தோ முருகேசன் பெயரும் தவறுதலாக இடம் பெற்றது குறித்து செல்லியல் சார்பாக எங்களின் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, இது தொடர்பில் அவருக்கு ஏற்பட்டிருக்கும் மரியாதைக் குறைவிற்காக மன்னிப்பும் கேட்டுக் கொள்கின்றோம்.
இவ்வண்ணம்
செல்லியல்.காம் நிர்வாகத்தினர்