கோலாலம்பூர், ஆகஸ்ட் 11 – அரசியல் நன்கொடை பெற்றதை வைத்து பிரதமரை மதிப்பிடக் கூடாது என்று சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ் கருத்துத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நஜிப் துன் ரசாகின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பரிமாற்றம் செய்யப்பட்ட நிதி, ‘சகோதர தேசத்தில்’ இருந்து வந்தது என்றும், எல்லா அரசியல் கட்சிகளும் இது போன்ற நன்கொடைகளைப் பெறுவது இயல்பு தான் என்றும் நஸ்ரி குறிப்பிட்டுள்ளார்.
“உதாரணமாக, ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட 5000 ரிங்கிட் செலவாகும். 100 தொகுதிகளைக் கற்பனை செய்து பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ள நஸ்ரி, அரசியல் கட்சிகள், தாங்கள் போட்டியிட இது போன்ற நன்கொடையாளர்களிடமிருந்து பெறவில்லை என்றால் எங்கே இருந்து பெறுவார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.