கொழும்பு, ஆகஸ்ட் 20- இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நாளை பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 17-ஆம் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அனைத்தும் மறுநாள் வெளியிடப்பட்டன.
225 உறுப்பினர்களில் 106 இடங்கள் பிடித்துள்ள ரணில் விக்ரமசிங்கே பிரதமராகப் பதவியேற்க, இன்னும் 7 உறுப்பினர்கள் தேவை.
அவருக்கு ஆதரவு கொடுக்க ஏராளமான உறுப்பினர்கள் முன் வந்துள்ளனர். எனவே, அவர் பிரதமராகப் பதவியேற்பது உறுதியாகி விட்டது.
முடிவுகள் வெளியான அன்று மாலையே அவர் பிரதமராகப் பதவியேற்க உள்ளதாகத் தகவல் வெளியானது.
ஆனால், சில நிர்வாகக் காரணங்களால் இன்று பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. இன்றும் அவர் பதவியேற்பது உறுதிப்படுத்தப்படாத நிலையில், நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் உறுதியாகப் பதவியேற்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அவருக்கு இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
அதன்படி,ரணில் விக்கிரம சிங்கே இலங்கையின் 23-ஆவது பிரதமராகப் பதவியேற்கவுள்ளார். அவர் பிரதமராகப் பதவியேற்பது இது நான்காவது முறையாகும்.