தஞ்சாவூர், ஆகஸ்ட் 21- விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனைப் வெடிகுண்டு வீசிக் கொலை செய்ய முயன்ற 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள வடசேரி என்னும் கிராமத்தில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடியேற்று விழா நடைபெற இருந்தது.
இந்தக் கொடியேற்ற விழாவிற்குத் திருமாவளவன் வரக் கூடாது என்றும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கொடியை எங்கள் ஊரில் ஏற்றக் கூடாது என்றும் கூறி, திருமாவளவனுக்கு எதிர்ப்புத் தெரிவித்து உயர்சாதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், வடசேரி ரவுண்டானா அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களைக் கலைந்து செல்லும் படிக் கூறியும், அவர்கள் கலைந்து செல்ல மறுத்துத் திருமாவளவனுக்கு எதிராக முழக்கமிட்டபடி இருந்தனர்.
திருமாவளவன் அவ்வழியாக வரும் நேரம் நெருங்கிவிட்டதால், அச்ம்பாவிதம் ஏதும் நடந்து விடக் கூடாதென்று காவல்துறையினர் அந்த இளைஞர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயல,காவல்துறையினருக்கும் இளைஞர்களுக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இந்நிலையில், பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலத்தூரில் ஒரு வன்முறைக் கும்பல் திருமாவளவன் வரும் போது அவர்மீது பெட்ரோல் குண்டுகளை வீசிக் கொலை செய்யும் நோக்கத்துடன் பதுங்கியிருப்பதாகக் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
ஆகையால் அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அங்கே பெட்ரோல் குண்டுகளுடன் பதுங்கியிருந்த 12 பேரைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த பெட்ரோல் குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.