Home இந்தியா விடுதலைச் சிறுத்தைகள் திருமா – ஆட்சியிலும் பங்கு கேட்கிறார்! திமுக விட்டுக் கொடுக்குமா?

விடுதலைச் சிறுத்தைகள் திருமா – ஆட்சியிலும் பங்கு கேட்கிறார்! திமுக விட்டுக் கொடுக்குமா?

230
0
SHARE
Ad
தொல்.திருமாவளவன்

சென்னை : என்னதான் விளக்கங்கள் திமுக பக்கம் இருந்தும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பக்கம் இருந்தும் வந்தாலும், திமுக-விடுதலைச் சிறுத்தைகள் மோதல் தொடங்கி விட்டது என்பதையே அண்மையக் காலச் சம்பவங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

அதற்கு ஏற்றாற்போல் இன்னொரு புதிய ஆயுதத்தைக் கையிலெடுத்திருக்கிறார் திருமா என கட்சித் தொண்டர்களால் அன்புடன் அழைக்கப்படும் தொல்.திருமாவளவன். ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கம்தான் அது. முழக்கம் புதிதல்ல என்றாலும், திமுக கூட்டணியில் இருந்து கொண்டே திருமா முழங்கியிருப்பதுதான் திருப்பம்.

கூடுதல் தொகுதிகள், மாநில அரசாங்கத்தில் அதிகாரப் பங்களிப்பு என்ற உருவில் அமைச்சுப் பொறுப்புகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எதிர்பார்க்கிறது.

#TamilSchoolmychoice

இதுகுறித்து திருமா தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். ஆனால் பதிவிட்ட அடுத்த சில மணி நேரத்திலேயே அந்தப் பதிவு நீக்கப்பட்டது. தனது எக்ஸ் தள நிர்வாகி தவறுதலாகப் பதிவிட்டார் எனக் கூறப்பட்டாலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) நாடு முழுவதும் தொலைக்காட்சி ஊடகங்களில் இதுவே விவாதப் பொருளாகியது.

தேர்தல் அரசியலில் காலடி எடுத்து வைத்த அப்போதே ‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்கிற முழக்கத்தை முன்வைத்ததாகவும் திருமா கூறியிருக்கிறார்.

நெய்வேலியில் முதல் முதலாக அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்ட போது முன்வைத்த முழக்கம் ‘கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம்!’ என்பதே – எனவும் குறிப்பிட்டிருக்கிறார் திருமா.

ஏற்கனவே, மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவையும், விஜய் கட்சியையும் அழைப்போம் எனக் கொளுத்திப் போட்டு தமிழ் நாட்டில் தேர்தல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இந்த அரசியல் முன்னெடுப்புகளின் மூலம் அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரை தமிழ் நாடு அரசியல் நாயகனாக திருமாதான் உருவெடுக்கப் போகிறார் என்பது உறுதியாகியிருக்கிறது.