Home Photo News மஇகா தேசியத் தலைவர் பதவி – 9 ஆண்டுகள் கட்டுப்பாடு நீக்கம்!

மஇகா தேசியத் தலைவர் பதவி – 9 ஆண்டுகள் கட்டுப்பாடு நீக்கம்!

286
0
SHARE
Ad
நேற்று நடைபெற்ற மஇகா தேசியப் பொதுப் பேரவையில் விக்னேஸ்வரன் – சரவணன்

*மஇகா தேசியத் தலைவர் பதவிக்கான 9 ஆண்டுகள் கட்டுப்பாடு நீக்கம்!

*இனி தேசியத் தலைவர் நிரந்தரமாகப் பதவி வகிக்கலாம்!

*மஇகா பொதுப் பேரவையில் அமைப்பு விதித் திருத்தங்கள்

கோலாலம்பூர்: நேற்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) நடைபெற்ற மஇகாவின் 78-வது தேசியப் பொதுப் பேரவையில் கொண்டுவரப்பட்ட மஇகா அமைப்பு விதிகளின் திருத்தங்களின்படி தேசியத் தலைவர் பதவிக்கான 9 ஆண்டுகள் கட்டுப்பாடு நீக்கப்பட்டது.

மஇகாவில் தேசியத் தலைவராகப் பதவி வகிப்பவர் 3 தவணைகளுக்கு, ஒரு தவணைக்கு தலா 3 ஆண்டுகள் வீதம் மொத்தம் 9 ஆண்டுகள் மட்டுமே பதவி வகிக்க முடியும்.

இந்த சட்டவிதி தற்போது நீக்கப்பட்டது. நேற்றைய மாநாட்டில் மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் முன்மொழிந்த இந்த சட்டத்திருத்தத்தை பேராளர்கள் எதிர்ப்பின்றி ஏற்றுக் கொண்டனர். மற்றொரு திருத்தமாக தொகுதித் தலைவர்கள் 3 தவணைகளுக்கு மட்டுமே பதவி வகிக்க முடியும் என்ற கட்டுப்பாடும் திருத்தப்பட்டது. இனி 4 தவணைகளுக்கு, ஒரு தவணைக்கு தலா 3 ஆண்டுகள் வீதம் ஒரு தொகுதித் தலைவர் பதவி வகிக்க முடியும். நான்கு தவணைகள் பதவி வகித்த பின்னர் ஒரு தவணை இடைவெளிக்குப் பின்னர் அவர் மீண்டும் தொகுதித் தலைவராகப் போட்டியிட முடியும்.

#TamilSchoolmychoice

இந்த மாற்றங்களை மத்திய செயற்குழு அங்கீகரித்துவிட்டதாகவும், தொகுதித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் தெரிவித்த சரவணன் அமைப்பு விதித் திருத்தங்களை ஏகமனதாக ஏற்றுக் கொள்ள மாநாட்டில் பரிந்துரைத்தார்.

அதைத் தொடர்ந்து பேராளர்கள் இந்த அமைப்பு விதித் திருத்தங்களை ஏற்றுக் கொண்டனர்.

இந்தத் திருத்தங்கள் சங்கப் பதிவகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டால், மஇகா தேசியத் தலைவர் பதவி வகிப்பவர் இனி காலவரையின்றி எப்போதும் நிரந்தரமாகப் பதவி வகிக்கலாம். முன்பிருந்த 9 ஆண்டுகள் கட்டுப்பாடு இனி இல்லை.

மஇகா 1946-இல் தோற்றுவிக்கப்பட்ட காலந்தொட்டு, மஇகா தேசியத் தலைவருக்கான பதவிக்காலத்தை ஒருவர் இத்தனை ஆண்டுகள்தான் வகிக்க முடியும் என்ற கட்டுப்பாடுகள் இருந்ததில்லை.

தொடக்க காலத்தில், மஇகாவின் தேசியத் தலைவர்கள் ஓரிரு ஆண்டுகள் மட்டுமே பதவி வகித்தனர். 1955-ஆம் ஆண்டில் தேசியத் தலைவரான துன் சம்பந்தன் தொடர்ந்து 18 ஆண்டுகள் தேசியத் தலைவராகப் பதவி வகித்தார்.

அதற்குப் பின்னர் 1973-இல் தலைவரான டான்ஸ்ரீ வெ.மாணிக்கவாசகம், 6 ஆண்டுகள் மட்டுமே பதவி வகித்தார். 1979-இல் மாணிக்கவாசகம் அகால மரணமடைந்ததைத் தொடர்ந்து தேசியத் தலைவரான துன் சாமிவேலு, தொடர்ந்து 32 ஆண்டுகள் தேசியத் தலைவராகப் பதவி வகித்து சாதனை புரிந்தார்.

எனினும் அவர் பதவி விலகுவதற்கு முன்பாக, தேசியத் தலைவருக்கான பதவிக் காலம் 3 தவணைகள்- அதாவது ஒரு தவணைக்கு 3 ஆண்டுகள் வீதம், 9 ஆண்டுகள் மட்டுமே – என்ற கட்டுப்பாடு, மஇகா அமைப்பு விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு, கொண்டுவரப்பட்டது.

அதைத் தொடர்ந்து சாமிவேலுவுக்குப் பிறகு தேசியத் தலைவர்களான டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலு, டான்ஸ்ரீ எஸ்.சுப்பிரமணியம் இருவரும் 9 ஆண்டுகளுக்கும் குறைவான காலமே தேசியத் தலைவர்களாகப் பதவி வகித்தனர்.

தற்போது தேசியத் தலைவராகப் பதவி வகிக்கும் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் 2018-இல் தேசியத் தலைவரானார். இரண்டு தவணைகள் பதவி வகித்து விட்ட அவர் தற்போது 3 தவணையாக தேசியத் தலைவர் பதவியை வகித்து வருகிறார். முந்தைய மஇகா அமைப்பு விதிகளின்படி அவரின் பதவிக் காலம் 2027-ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது.

இந்நிலையில் தேசியத் தலைவருக்கான பதவிக் கால கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதால் அவர் இனி அடுத்துவரும் (2027) தேசியத் தலைவருக்கான தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் தொடர்ந்து தேசியத் தலைவராகப் பதவியில் நீடிக்கலாம்.