புதுடில்லி – ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் தொடர்பான வரி ஏய்ப்பு வழக்கில் வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி டில்லி பெருநகரக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கலாநிதி மாறனுக்கு அழைப்பாணை (சம்மன்) அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
2013-14 நிதியாண்டில் ரூ. 110.6 கோடி அளவுக்கும், 2014-15 நிதியாண்டில் ரூ. 36.5 கோடி அளவுக்கும் ஊழியர்களிடம் பிடித்தம் செய்த தொகையை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வருமான வரித் துறைக்குச் செலுத்தவில்லை என ஸ்பைஸ் ஜெட் நிறுவனத் தலைவராக இருந்த கலாநிதி மாறன் மற்றும் அதன் மேலாண்மை இயக்குநராக இருந்த எஸ்.நடராஜன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் ஏற்கனவே சம்மன் அனுப்பியும் கலாநிதிமாறனும் நடராஜனும் ஆஜராகவில்லை.
இந்நிலையில், இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது வருமான வரித் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரிஜேஷ் சிங், “கலாநிதி மாறன், நடராஜன் ஆகிய இருவரும் இந்த வழக்கில் சம்மன் பெற்றுக் கொண்டது பற்றிய விவரத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை. வழக்கு விசாரணைக்கு நேரிலும் வரவில்லை” எனக் குற்றம் சுமத்தினார்.
இதைக் கேட்ட நீதிபதி பிரீதம் சிங், “ஒருவேளை சம்பந்தப்பட்டவர்களுக்குச் சம்மன் கிடைக்காமல் போயிருக்கலாம். எனவே இருவரும் வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்ப வேண்டும்” என்று உத்தரவிட்டார்.