சென்னை – ஏழை மாணவ- மாணவியர் உயர்கல்வி கற்க,நடிகர் விஷால் தனது அம்மாவின் பெயரில் அறக்கட்டளை தொடங்கியுள்ளார்.
நடிகர் சூர்யா அகரம் என்னும் அமைப்பின் மூலம் கல்வி உதவித் தொகை வழங்கி வருவது நாமறிந்ததே! அதுபோல் நடிகர் விஷாலும் ஓர் அமைப்பு தொடங்கியிருக்கிறார்.
நடிகர் விஷால் இதற்கு முன் எந்த அமைப்பையும் உருவாக்காமல் தனிப்பட்ட முறையில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு நிறைய உதவிகள் செய்து வந்தார். அரசுப் பள்ளிகளுக்கு அடிக்கடி சென்று பார்வையிட்டு அடிப்படை வசதிகள் இல்லையெனில், அதையும் செய்து கொடுத்து வந்தார்.
தற்போது ‘தேவி சமூகம் மற்றும் கல்வி அறக்கட்டளை’ என்று தனது தாயார் பெயரில் அறக்கட்டளை தொடங்கியிருக்கிறார். அந்த அறக்கட்டளை மூலம் , 16 ஏழை மாணவிகள் உயர்கல்வி பயில உதவி செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உதவிகள் செய்வதை முறைப்படுத்திடவே இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. மறைந்த மேதை அப்துல்கலாம் கண்ட கனவின்படி, பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுவதே இதன் முக்கியக் குறிக்கோள். அதன்படி கலைக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி மாணவிகள் என 16 பேருக்கு ஏற்கனவே கல்வி உதவி செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.