கிள்ளான் – ஓய்வுபெற்ற தமிழ்ப்பள்ளி ஆசிரியர் நலனபிவிருத்திப் பேரவையின் மாநாடு, ஆகஸ்ட் 4 மற்றும் 5ஆம் நாள்களில் மலாக்காவில் நடந்தது . அதில் ஓய்வு பெற்ற தமிழாசிரியரான கிள்ளானைச் சேர்ந்த முனைவர் முரசு நெடுமாறன் அவர்களுக்குத் ‘தோக்கோ குரு’ என்னும் நல்லாசிரியர் விருது வழங்கப் பட்டது.
தலைவர் க. கிருஷ்ணன் முனைவர் முரசு நெடுமாறனுக்கு, ‘நல்லாசிரியர்’ (தோக்கோ குரு) விருதளித்தல்
சிலாங்கூர் மாநிலக்கிளையின் செயலாளர் ரெ. அரிகிருஷ்ணன் அவர்களின் பொறுப்பாண்மையில், தகுதி வாய்ந்த நடுவர் குழு, இவ்விருதுக்குத் தேசிய அளவில் முனைவர் முரசு நெடுமாறன் அவர்களை, தேர்ந்தெடுத்தது.
மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் இவ்விருதினை, இயக்கத்தின் தேசியத் தலைவர் க. கிருஷ்ணன் அவர்கள் பொன்னாடைபோர்த்தி மாலை அணிவித்து பொற்கிழியுடன் வழங்கினார். விருது பெற்றவருக்குரிய குறிப்புகளை சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த திரு. கு பொன்னையா வாசித்தார்.
முரசு நெடுமாறன் ஏற்புரை வழங்குகிறார்
முரசு நெடுமாறன் ஒரு பொதுநிலை ஆசிரியராய் வாழ்க்கையைத் தொடங்கி, விடாது கற்று, ஆய்வுகள் நடத்தி முனைவர் பட்டம் பெற்ற வரலாற்றை பொன்னையா எடுத்துரைத்தார்.
தம் 15ஆம் அகவையிலிருந்து திரட்டிய நூறாண்டு கால மலேசியத் தமிழ் கவிதைகளைத் தக்கார் தொகுத்தும் மலேசியத் தமிழர் வரலாற்றை எழுதியும் ஓர் அரிய ஆவணம்போல் ‘மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சிய’த்தை முரசு நெடுமாறன் வெளியிட்டமையை சிறப்பாகக் குறிப்பிட்டார்.
“பாப்பாவின் பாவல”ரென்று தமிழ்கூறு நல்லுலகு அறிந்த முரசு நெடுமாறன், குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குச் செய்துள்ள தொண்டு குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
கற்றல் கற்பித்தல் மேம்பாட்டிற்கு அவர் வழங்கியுள்ள பங்களிப்பையும் குறிப்பிட்டார். தமிழக அரசின் பாவேந்தர் விருது போன்ற பல உயரிய விருதுகள் பெற்றிருப்பதனையும் விளக்கமாக எடுத்துரைத்தார்.
‘ஆசிரியர் திலகம்’ என்று பாராட்டி, நல்லாசிரியர் (தோக்கோ குரு) விருது வழங்கப் பெற்ற முனைவர் முரசு நெடுமாறன், கல்வி, கலை, இலக்கியம் குறித்த தம் அனுபவங்களை மிகச் சுருக்கமாகவும் உருக்கத்தோடும் குறிப்பிட்டுத் தம் நன்றியைப் புலப்படுத்தினார்.
தொடர்ந்து 75 அகவையை அடைந்த ஒன்பது மூத்த ஆசிரியர்களுக்குச் சிறப்புச் செய்யப்பெற்றது.