சென்னை- நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு கடந்த 2006-ஆம் ஆண்டு ஜூலை 21-ஆம் தேதி கடற்கரையில் காந்தி சிலைக்கு எதிரே மிகப்பெரிய சிலை அமைக்கப்பட்டது. அப்போதைய முதல்வர் கருணாநிதி இந்தச் சிலையைத் திறந்து வைத்தார்.
இந்தச் சிலை போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கிறதென்றும், பெரிய சிலையாக இருப்பதால் பாதசாரிகள் கடப்பது தெரியாமல் விபத்து நேரிடுகிறதென்றும் கூறி, அந்தச் சிலையை அகற்றி வேறு இடத்தில் வைக்க வேண்டுமெனப் பொது நல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது.
எனவே, சிவாஜி சிலையை அங்கிருந்து அகற்றத் தமிழக அரசிற்கு உயர்நீதிமன்றம் அளித்திருந்த ஒரு வார கால அவகாசம் முடியும் தறுவாயில், முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில், அடையாறில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் சிவாஜிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்து சிவாஜி ரசிகர்களையும், நடிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இந்த அறிவிப்பிற்கு சிவாஜியின் குடும்பத்தார் சார்பில் ஜெயலலிதாவிற்குப் பிரபு நன்றி தெரிவித்தார்.
“எங்கள் தந்தை சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் அம்மா அறிவித்திருப்பது எங்கள் குடும்பத்தினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் திலகத்தின் லட்சக்கணக்கான ரசிகர்களும் மகிழ்ச்சியில் திளைத்துப் போய் இருக்கிறார்கள்.
எங்களின் உச்சியைக் குளிர வைத்த அம்மாவுக்கு எனது சார்பிலும், அண்ணன் ராம்குமார் சார்பிலும், மகன் விக்ரம்பிரபு சார்பிலும் மற்றும் குடும்பத்தினரின் அனைவரது சார்பிலும், ரசிகர்கள் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்துள்ளார் பிரபு.
மேலும், சிவாஜியின் கலையுலக வாரிசாகவும், சிவாஜி குடும்பத்தில் ஒருவராகவும் கருதப்படுகின்ற நடிகர் கமல்ஹாசன், இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“நடிகர் திலகத்தை மரியாதையுடன் நினைவு கோரியதில் தமிழக அரசு, நடிகர் இனத்துக்கும் தனக்கும் பெருமை சேர்த்துக்கொண்டது. கண்ணும் மனதும் நிறைய, நன்றி!
அன்னாரது வாரிசு எனத் தம்மை அடையாளம் காட்டிக் கொள்ள முற்படும் பல்லாயிரம் பேரில் ஒருவன்.
-அன்பன்
கமல் ஹாசன்” எனக் கூறியுள்ளார் கமல்.
மேலும், இதுகுறித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“மறைந்த நடிகர்திலகம் சிவாஜிகணேசனுக்கு மணி மண்டபம் கட்டுவதாக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள் சார்பிலும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நடிகர் சங்கச் சரித்திரத்தில் ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு சாதனையாக என்றென்றும் போற்றப்படும்” எனக் கூறியுள்ளார்.
இதுபோல் திரையுலகமே ஜெயலலிதாவிற்கு நன்றி செலுத்தி வருகிறது.