பெங்களூர் – டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கக் கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதாகும்.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம், முன்னாள் நீதிபதி வி. கே. பாலி தலைமையில் அமைக்கப்பட்ட விருதுக் குழு இவ்வாண்டு இவ்விருதிற்காகச் சானியா மிர்சாவைத் தேர்வு செய்தது.
அண்மையில் நடந்த விம்பிள்டன் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றதால் அவருடைய பெயர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் இதனை எதிர்த்து பாராலிம்பிக் வீரர் ஹெச்.என்.கிரிஷா என்பவர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
2012-ல் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் இந்த ஹெச்.என்.கிரிஷா.
மேலும், 2014 பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் வெண்கலப் பதக்கம் பெற்றவர்.
அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது:
“கேல் ரத்னா விருது பெற சானியா மிர்சாவை விட நான் தான் தகுதியானவன். 2011-2014 வரை சானியா எந்தவொரு பதக்கமும் பெறவில்லை, ஆனால், நான் இரண்டு பதக்கங்கள் பெற்று 90 புள்ளிகள் பெற்றுள்ளேன். எனவே,முறைப்படி அந்த விருதை எனக்கு வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
எனவே, வழக்கு விசாரணை முடியும் வரை சானியாவுக்குக் கேல் ரத்னா விருது வழங்கக் கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மேலும், இது தொடர்பாக மத்திய அரசும் சானியா மிர்சாவும் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.