Home Featured நாடு “மலேசியர்களை முட்டாள்கள் என எண்ண வேண்டாம்” – மகாதீர் கடும் விமர்சனம்

“மலேசியர்களை முட்டாள்கள் என எண்ண வேண்டாம்” – மகாதீர் கடும் விமர்சனம்

553
0
SHARE
Ad

NAJIB6கோலாலம்பூர்- மலேசியர்கள் முட்டாள்கள் என நினைப்பதை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று துன் மகாதீர் கூறியுள்ளார்.

தனது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட 2.6 பில்லியன் ரிங்கிட் தொகையானது அன்பளிப்பாக வந்தது என்று நஜிப் கூறியதை யாராலும் நம்ப முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ள மகாதீர், எனினும் தான் கூறியதை மக்கள் ஏற்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளை நஜிப் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

“ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததற்காக வழங்கப்பட்ட தொகை என்று நஜிப் கூறுவது அபத்தமாக உள்ளது. ஏனெனில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தான் அப்பெயரில் இயங்கத் தொடங்கியது. ஆனால் 2.6 பில்லியன் தொகை 2013 அல்லது அதற்கும் முன்பாகவே வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

“மலேசியாவில் இஸ்லாத்தை பொறுத்தவரை மிதமான போக்கு நிலவுவதால் அது குறித்த பிரசாரத்திற்கு அளிக்கப்பட்ட நன்கொடை என்று கூறுவதும் அபத்தம்தான். ஏனெனில் மலேசியா எப்போதுமே தீவிர இஸ்லாமிய கோட்பாடுகளை பின்பற்றியது இல்லை.”

“தேர்தலுக்காக 700 மில்லியன் டாலர்களா? அது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக பெறப்பட்ட தொகையா? அப்படி எனில் நஜிப் வெற்றி பெறுவதற்காக யாரோ ஒருவர் எதற்காக மலேசிய வாக்காளர்களுக்கு பணம் தர வேண்டும்? மேலும் லஞ்சம் கொடுக்காமலேயே தேசிய முன்னணியை மலேசியர்கள் இத்தனை காலமாக ஆதரித்து வந்துள்ளனர்,” என்று மகாதீர் கூறியுள்ளார்.

மலேசியர்களை முட்டாள்களாக கருத வேண்டாம் என இதுவரை மூன்று முக்கிய பிரமுகர்கள் கூறியுள்ளனர். ஜோகூர் சுல்தான், நஜிப்பின் சகோதரர் நசிர் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது மகாதீரும் அதே கருத்தை தெரிவித்துள்ளார்.