வர்ஜினியா-தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சிக்காக சாலையில் நின்றபடியே ஒரு பெண்மணியிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்த தொலைக்காட்சி செய்தியாளரும், ஒளிப்பதிவாளரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அதை நேரலையில் கண்ட தொலைக்காட்சி நிலைய ஊழியர்களும் நேயர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த துணிகர சம்பவம் வர்ஜினியாவில் அரங்கேறியுள்ளது.
அலிசன் பார்க்கர் (24 வயது) என்ற பெண் செய்தியாளரும், ஆடம் வார்ட் (27 வயது) என்ற ஒளிப்பதிவாளரும் நேற்று புதன்கிழமை காலை 6.45 மணியளவில் தங்கள் தொலைக்காட்சியின் நேரலை நிகழ்சிக்காக விக்கி கார்ட்னர் என்ற பெண்மணியை பேட்டி எடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மர்ம மனிதன் மூவரையும் நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுடத்தொடங்கினான். இதில் சம்பவ இடத்திலேயே ஒளிப்பதிவாளர் ஆடம் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். இதைக் கண்டு இரு பெண்மணிகளும் பீதியில் அலறினர்.
இதையடுத்து இவர்களின் மீது பார்வையைத் திருப்பிய மர்ம மனிதன், மீண்டும் சுடத்தொடங்க, இம்முறை அலிசன் பார்க்கர் உயிரிழந்தார். விக்கி கார்ட்னர் முதுகில் குண்டு பாய்ந்ததில் அவர் சுருண்டு விழுந்து மயக்கமானார். தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆடம் வார்ட் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சியை அவரது வருங்கால மனைவியாகப் போகிறவர் தொலைக்காட்சி நிறுவன அலுவலகத்தில் நேரலையில் கண்டு மனம் நொறுங்கிப் போனார். அவருக்கு ஆறுதல் கூறி தேற்றி வருவதாக டபிள்யூடிபிஜே (WDBJ)தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இதனிடையே, அந்த மர்ம மனிதன் சிறிது நேரத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்துவிட்டதாகவும் டபிள்யூடிபிஜே (WDBJ)தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
அதிர்ச்சியில் உறைய வைக்கும் அந்தக் காணொளி:
https://www.youtube.com/watch?v=9H07rMdr-KE