சென்னை – அப்துல்கலாம் பிறந்த நாள் அன்று சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் விழிப்புணர்வுப் பேரணி நடத்த அனுமதி கேட்டு நடிகர் விவேக் நேற்று காவல்துறை ஆணையரைச் சந்தித்தார். அதற்கு அனுமதி வழங்குவதாக ஆணையர் உறுதியளித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் விவேக் கூறியதாவது:
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ஆம் தேதி, சென்னை மெரினாவில் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வுப் பேரணி நடக்கவிருக்கிறது. இந்தியாவில் பசுமைப் புரட்சி ஏற்பட வலியுறுத்தியும், தொழிற்புரட்சி உண்டாகும் வழிவகைகளைத் தெரிவித்தும், அறிவியல் துறையில் எழுச்சி உருவாக ஊக்கம் கொடுத்தும் இந்த விழிப்புணர்வுப் பேரணி நடக்கவுள்ளது.
‘பசுமைக் கலாம்’ என்ற அமைப்பின் மூலம் தமிழகம் முழுவதும் ஏற்கனவே 27 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளோம்.அவ்வகையில் மேலும் 2020-ஆம் ஆண்டை நினைவூட்டும் விதமாக2020 மரக்கன்றுகளைப் பேரணியின் போது மாணவர்களுக்கு வழங்கி அவற்றை நடச் செய்வோம்.
2020ஆம் ஆண்டில் இந்தியா அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி பெற்று முன்னணியில் இருக்க வேண்டும் என்பது தான் அப்துல்கலாமின் கனவு. அதைத்தான் ‘தொலைநோக்குத் திட்டம் 2020’ என்று சொன்னார் அவர்.
அவரது கனவை நனவாக்கும் உணர்வை மாணவர்களிடம் வளர்க்கும் வகையில் அந்தப் பேரணி அமையும்”என்றார் விவேக்.
ஒரு நடிகராக இருந்து பணமும் புகழும் சம்பாதிப்பதை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், இப்படி மகத்தான சேவையில் ஈடுபடும் விவேக் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர்.
.