Home கலை உலகம் விவேக் – மலேசிய நினைவுகள்

விவேக் – மலேசிய நினைவுகள்

1287
0
SHARE
Ad

(மறைந்த நடிகர் விவேக்கின் திரையுலகப் பிரவேசம், மலேசியாவில் அவர் கொண்டிருந்த தொடர்புகள், முன்னாள் பிரதமர் துன் மகாதீர் மீது கொண்டிருந்த அபிமானம், மகாதீரையே ஒருமுறை பேட்டி எடுத்தது போன்ற விவரங்களை விவேக்கின் நினைவஞ்சலியாக வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர், இரா.முத்தரசன். மேற்கண்ட காணொலியின் கட்டுரை வடிவம்)

கடந்த 35 ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகில் தனது வித்தியாச நகைச்சுவை நடிப்பின் வழி சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் விவேக். சனிக்கிழமை ஏப்ரல் 17ஆம் தேதி அதிகாலை அதிகாலை 4.35 மணிக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக விவேக் காலமானார்.

#TamilSchoolmychoice

சனிக்கிழமையன்று மாலையே அவரின் இறுதிச் சடங்குகள் தமிழக அரசு மரியாதையுடன் காவல் துறையின் 78 மரியாதை குண்டுகள் முழக்கத்துடன் நடந்து முடிந்திருக்கிறது.

விவேக்கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தின்வழி அனுதாபங்களைப் பதிவு செய்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பலதரப்பட்ட பிரமுகர்களும் விவேக் மறைவு தங்களின் அனுதாபங்களைத் தெரிவித்தனர்.

அவரின் மகள் தேஜஸ்வினி தந்தைக்கான இறுதிச் சடங்குகளைச் செய்திருக்கிறார். இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் சென்னை மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் விவேக்கின் நல்லுடல் தகனம் செய்யப்பட்டது.

விவேக்கிற்கு அம்ரித நந்தினி என்ற இன்னொரு மகளும் இருக்கிறார்.

விவேக்கின் இளைய மகன் பிரசன்னா குமார் 2015-இல் தனது பதின்ம வயதிலேயே அகால மரணமடைந்தார். அந்த சோகம் விவேக்கை பெரிதும் உலுக்கி விட்டது. அவரால் அந்த இழப்பை இறுதிவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்கின்றனர், அவருக்கு நெருக்கமானவர்கள்.

தன் மலேசிய நண்பர் அந்தோணியுடன் விவேக்

கடந்த 6 ஆண்டுகளில் மெல்ல மெல்ல அந்த சோகத்திலிருந்து மீண்டு வந்தார் விவேக். நடிப்பதிலும் மரம் நடுவதிலும் மீண்டும் ஆர்வத்துடன் ஈடுபட்டார். எனினும், தனது 59 வயதிலேயே நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.

வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 15) கொவிட-19 தடுப்பூசி போட்டுக் கொண்ட விவேக் அதுகுறித்த விழிப்புணர்வு செய்தியையும் வழங்கியிருந்தார்.

வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 16) அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு, தடுப்பூசி காரணமாக ஏற்படவில்லை என்றும் தமிழக அரசின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவரின் மரணச் செய்தி, உலகத் தமிழர்களையே சோகத்தில் ஆழ்த்தியது. மலேசிய இந்தியர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மலேசியாவுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தவர் விவேக். பல நெருங்கிய நண்பர்களை மலேசியாவில் அவர் கொண்டிருந்தார்.

அவரின் மலேசியத் தொடர்புகளையும் அனுபவங்களையும், பார்ப்பதற்கு முன்னர் அவரின் திரையுலகப் பிரவேசத்தையும் அவர் வாழ்க்கையின் சில முக்கிய சம்பவங்களையும் சுருக்கமாகப் பார்ப்போம்.

1987-இல் திரையுலகப் பிரவேசம்

மதுரை அமெரிக்கல் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த விவேக், எம்.காம் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

தமிழ் நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்து கொண்டே, சென்னையில் இயங்கும் நகைச்சுவை மன்றத்தில் (Humorous club) பங்கு பெற்று பல நகைச்சுவை மேடை உரைகளையும், படைப்புகளையும் வழங்கி சென்னை வட்டாரத்தில் பிரபலமானார் விவேக்.

அவர் ஒரு சிறந்த குரல்மாற்றுக் (மிமிக்ரி) கலைஞரும் கூட! பல பிரபலங்களின் குரல்களை அப்படியே பேசிக் காட்டும் வல்லமை பெற்றிருந்தார்.

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மோதிரக் கரங்களால் குட்டுப்பட்டு அறிமுகம் கண்ட பெருமைக்குரியவர் விவேக். அவர் எப்படி பாலசந்தரை ஈர்த்தார் என்பது இன்னொரு சுவாரசியம்.

பாலசந்தரின் படங்கள் குறித்து நீண்ட விமர்சனக் கட்டுரைகள் எழுதி அனுப்பி வந்தார் விவேக். அந்தக் கடிதங்கள் சுவாரசியமாக இருக்கவே ஒருமுறை விவேக்கை நேரில் சந்தித்தார் பாலசந்தார். தொடர்ந்து தனது “மனதில் உறுதி வேண்டும்” படத்தில் சுகாசினியின் தம்பியாக நடிக்க வாய்ப்பும் அளித்தார்.

அதைத் தொடர்ந்து பல படங்களில் சிறிய வேடங்களில், நடிக்கத் தொடங்கினார் விவேக். பாலசந்தரின் “புதுப் புது அர்த்தங்கள்” திரைப்படம் விவேக்கை இன்னொரு பரிமாணத்திற்குக் கொண்டு சென்றது.

அதில் அவர் அடிக்கடி கூறிய வசனம் “இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்”. ஆனால், அவரின் மரணத்தின்போதும் அந்த வசனம்தான் அடிக்கடி இரசிகர்களால் நினைவுகூரப்படுகிறது என்பதும் ஒரு சோகம்தான்.

தொடர்ந்து பல படங்களில் கதாநாயகன் கூட வரும் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்தார் விவேக். அவர் இல்லாத படங்களே இல்லை எனும் அளவுக்கு தமிழ்த் திரையுலகை ஆக்கிரமித்தார்.

வெறும் நகைச்சுவைக் காட்சிகளிலேயே வந்த அவரின் வாழ்க்கையைத் திசை திருப்பிய படம் “திருநெல்வேலி”. அந்தப் படத்தில் இயக்குநரின் ஒத்துழைப்போடு பல சீர்திருத்தக் கருத்துகளை நகைச்சுவையோடு புகுத்தினார் விவேக். அந்தப் படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைக்க அதையே தனது பாணியாக மாற்றிக் கொண்டார்.

அடுத்தடுத்த படங்களில் அவர் தமிழ் சமுதாயத்தில் புரையோடிக் கிடந்த பல மூடப் பழக்க வழக்கங்களையும், சம்பிராதயங்களையும் நாசூக்காகச் சாடினார்.

அதற்காக “சின்னக் கலைவாணர்” எனக் கொண்டாடப்பட்டார். “ஜனங்களின் கலைஞன்” என்றும் போற்றப்பட்டார்.

மறைந்த நடிகர் எம்.ஆர்.இராதாவை தனது குருவாகக் கொண்டு செயல்பட்டார் விவேக். ஒருமுறை எம்.ஆர்.இராதாவின் மகன் ராதாரவி இல்லத்திற்கு சென்று “உங்கள் தந்தையைத்தான் என் மானசீகக் குருவாகக் கொண்டு நடித்து வருகிறேன். அவரின் புகைப்படம் ஒன்றைத் தாருங்கள்” என்று கேட்டு வாங்கிக் கொண்டாராம் விவேக்.

ராதாரவியே தனது இரங்கல் செய்தியில் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

வாழ்க்கையை மாற்றிய அப்துல் கலாம்

ஒருமுறை அப்துல் கலாமைச் சந்திக்கச் சென்றார் விவேக். அப்போது பத்து இலட்சம் மரக்கன்றுகளை நடுங்கள் என அப்துல் கலாம் வேண்டுகோள் விடுக்க அதையே வேதவாக்காக எடுத்துக்கொண்டு, மரம் நடும் நற்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் விவேக்.

அடுத்த சில ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு 10 இலட்சம் இலக்கை அடைந்தார். ஆனால் அப்துல் கலாமோ, 10 இலட்சம் போதாது, 1 கோடி (10 மில்லியன்) மரங்கள் நட வேண்டும் எனக் கட்டளையிட்டார்.

அதையும் தலைமேல் ஏற்றுக் கொண்டு பாடுபட்டார் விவேக். தனது 59-வது வயதில் அவர் மறைந்த நாள் வரை 33 இலட்சத்துக்கும் மேற்பட்ட (3.3 மில்லியன்) மரக் கன்றுகளை நட்டு சாதனை படைத்திருக்கிறார் விவேக்.

இன்று அவருக்கு அனுதாபம் தெரிவிக்கும் அவரின் தமிழக இரசிகர்கள், நண்பர்கள் பலரும் மரக்கன்றுகளை நட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர் என செய்திகள் வருகின்றன. இதன் மூலம் எத்தகைய தாக்கங்களை அவர் தனது மரம் நடும் பணியால் ஏற்படுத்தியிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

விவேக்கின் மலேசிய நினைவுகள்

அடிக்கடி தனிப்பட்ட வருகைக்காகவும், நிகழ்ச்சிகளுக்காகவும் மலேசியா வந்து சென்றவர் விவேக். இங்கு பல நண்பர்களைக் கொண்டிருந்தார். அதில் குறிப்பிட்டத்தக்க நண்பர் ஒரு விளம்பர நிறுவனம் நடத்தி வரும் டத்தோ அந்தோணி அரிபின்.

இங்கு பல பிரமுகர்களைச் சந்தித்து அவர்களோடு நட்பையும் தொடர்பையும் ஏற்படுத்திக் கொண்டவர் விவேக்.

வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் உலக நடப்புகளையும் உன்னிப்பாகக் கவனித்து வந்தவர் விவேக். அதன் காரணமாக அவருக்கு நம் நாட்டின் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் மீது மிகப் பெரிய அபிமானமும் ஏற்பட்டது.

அவரை இரண்டு முறை சந்தித்தவர், ஒரு முறை மகாதீரைப் பேட்டியெடுத்து அதனை சமூக ஊடகங்களிலும் வெளியிட்டார்.

இவ்வாறாக பன்முகத் திறன்களையும், ஆற்றல்களையும் கொண்டிருந்தவர் அகால மரணமடைந்ததும், அவரின் மரம் நடும் பணிகள் தற்போது முடங்கியிருப்பதும், தமிழ் திரையுலகம் மட்டுமின்றி, தமிழ் சமுதாயம், சுற்றுச் சூழல் அமைப்புகள் என அனைத்துத் தரப்புகளுக்கும் ஈடுசெய்ய முடியாத மாபெரும் இழப்புதான்.

-இரா.முத்தரசன்