சென்னை: தேர்தல் விதிமீறல் நடக்காமல் இருப்பதை தவிர்க்க முறையாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் நிகழும் விதிமீறல்கள், மர்ம சம்பவங்கள் ஜனநாயகத்தின் மீதான அச்சத்தையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்துவதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
“வாக்கு எண்ணும் முறையை எளிதாக்குவதற்கும், செல்லாத போலி வாக்குகளை தவிர்க்கவும் வாக்கு இயந்திரங்கள் வந்த பிறகும் வாக்கு எணிக்கையை தள்ளிவைத்ததற்கு சொல்லப்படும் காரணங்கள் ஏற்புடையதல்ல. ஏறக்குறைய ஒருமாத கால காத்திருப்பு என்பது அனாவசியமானது ஆபத்தானது,” என்று அவர் கூறினார்.
வாக்கு இயந்திரங்கள் வைத்திருக்கும் வளாகங்களில் மறைக்காணிகள் அடிக்கடி பழுதாவதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மக்களின் உரிமைகள் மதிக்கப்படும் வகையில் தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படுவதே ஜனநாயகத்திற்கு பெருமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.