கூலிம் – ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இருவரும் முறையே கட்சியின் நடப்பு பதவிகளில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கெடா மாநில மஇகா தலைவர் செனட்டர் டத்தோ எஸ். ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை (ஏப்ரல் 19) கெடா மாநிலத்தின் பெக்கான் செர்டாங் ம.இ.கா. கிளையின் ஆண்டுக் கூட்டத்தை தொடக்கி வைத்து பேசுகையில் ஆனந்தன் இவ்வாறு கூறினார். அவர் பெக்கான் செர்டாங் கிளையின் தலைவருமாவார்.
அவர் மேலும் பேசுகையில், இந்நாட்டு இந்தியர்களின் எதிர்கால நல்வாழ்வுக்கும் வளத்திற்கும் இவர்களின் சேவை தேவை என்றார்.
“ம.இ.கா. இன்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமைத்துவத்தில் பீடு நடைபோடுகிறது. கட்சியை சிறப்பாக வழிநடத்துவதோடு கடனில்லாத கட்சியாக அதனை உருவாக்கி இருக்கிறார். கட்சி உறுப்பினர்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் விக்னேஸ்வரனின் பணிகள் இன்னமும் தேவைப்படுகிறது. கட்சி சார்ந்த நடவடிக்கைகளை எவ்வாறு உறுப்பினர்களிடத்தில் சேர்க்க முடியும் என்பதை உருமாற்று சிந்தனையோடு சிந்திக்கும் தலைவராக விக்னேஸ்வரன் திகழ்கிறார்” என ஆனந்தன் விக்னேஸ்வரன் தலைமைத்துவம் குறித்து புகழாரம் சூட்டினார்.
“விக்னேஸ்வரனுக்குத் துணையாக டத்தோஸ்ரீ சரவணனும் அரும்பணியாற்றி நல்லதொரு சேவையை ஆற்றி வருகிறார். கட்சியின் தலைவரும் துணைத்தலைவரும் எதிர்வரும் மஇகா கட்சித் தேர்தலில் போட்டியின்றி தேர்வு பெறவேண்டும்” என அறைகூவல் விடுத்த ஆனந்தன், தனது தலைமையிலான பெக்கான் செர்டாங் கிளை இது தொடர்பான தீர்மானத்தை ஆண்டுக் கூட்டத்தில் நிறைவேற்றியிருப்பதாகவும் தெரிவித்தார்.
விக்னேஸ்வரன், சரவணன் இருவருக்கும் தானும், தனது கிளையும் முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் ஆனந்தன் தெரிவித்தார்.
கெடா மாநிலத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் கடன்கள் முழுமையாக இன்றைக்கு அடைக்கப்பட்டு இருக்கிறது என்றால் அதற்கு காரணம் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் என்றால் மிகையில்லை என்று கெடா மாநிலத் தலைவருமான டத்தோ ஆனந்தன் கூறினார்.
இந்த 2021-ஆம் ஆண்டு மஇகாவுக்கு தேர்தல் ஆண்டாகும். முதல் கட்டமாக தற்போது கிளைத் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. அடுத்த கட்டமாக தேசியத் தலைவருக்கான தேர்தலும், அதைத் தொடர்ந்து தொகுதிகள், மாநிலங்களுக்கான தேர்தல்களும் தேசியப் பதவிகளுக்கான தேர்தல்களும் நடைபெறும்.