நாம் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்த படி, இனப் பாகுபாட்டை அப்பட்டமாக குறிப்பிடும் வகையில், தோலின் நிறத்திற்கு தகுந்த எமொஜிக்களை மேம்படுத்தி இருந்த வாட்சாப், ஆபாசமான நடுவிரல் குறியீட்டையும் மேம்படுத்தி உள்ளது. இந்த நடு விரல் குறியீடும் தோல் நிறத்திற்கு தகுந்தார் போல் வேறுபடுகிறது.
இத்தகைய செய்கை ஆபாசமானது தான் என்பது பகிரங்கமான உண்மை. பொது இடங்களில், இத்தகைய செய்கையை காட்டினால் பல்வேறு நாடுகளில் அது தண்டனைக்குரிய குற்றமாகும். அப்படி இருக்கும் பொழுது, உலக அளவில் வெளியாகி உள்ள இந்த எமொஜிக்களுக்கு இன்னும் எதிர்ப்புகள் பெரிய அளவில் கிளம்பவில்லை என்பது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.
அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் அதிகமாக இருந்து வந்த இந்த செய்கைகள், தற்போது ஆசிய நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. ஒருவரை அதிகபட்ச அவமானத்திற்கு உள்ளாக்கும் இந்த செய்கையால், ஆகச் சிறந்த பலன் வேறு ஒன்றும் இல்லை. பொதுவாக வாட்சாப் போன்ற சமூக ஊடகங்களில், நல்லதை விட தீயது மிக வேகமாக பரவி விடும் என்பது மறுக்க முடியாத ஒன்று. தற்போது இந்த எமொஜிக்களும் அப்படி ஒன்றாகத் தான் மாறிவிட்டது.
தங்கள் வர்த்தக நலனிற்காக தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படுத்தி வரும் இத்தகைய போக்கை, உலக நாடுகள் கண்காணிப்பதற்கும், தடுப்பதற்கு மிகச் சரியான தருணம் இது தான் என்பதை குறிப்பிட வேண்டியது இங்கு அவசியமாகிறது.