சென்னை – கேரள மக்கள் அனைவருக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஓணம் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஆணவம் பிடித்த மகாபலிச் சக்கரவர்த்தியைத் திருமால் வாமன அவதாரம் பூண்டு வதம் செய்த திருநாள் ஓணமாகும்.
ஆணவக்காரனாக இருந்தாலும் மகாபலி தயாள குணம் படைத்தவன். ஆகையால் அவன் வதத்தின் போது திருமாலிடம், ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண வரம் தர வேண்டுமென வேண்டினான். அதற்குத் திருமாலும் அருளினார்.
அதன்படி ஒவ்வோர் ஆண்டும் ஆவணி திருவோணத்தன்று மக்களைக் காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் தினமாக ஓணம் திருநாள் மலையாள மொழி பேசும் மக்களால் கொண்டாடப்படுகிறது.
மலையாள மொழி பேசும் மக்களால் பத்து நாட்கள் கொண்டாடப்படும் இந்த ஓணம் பண்டிகையின் போது, மக்கள் தங்கள் இல்லங்களின் வாசல்களில் வண்ணப் பூக்களால் அத்தப்பூக் கோலமிட்டு, புத்தாடை அணிந்து, ஓண விருந்துண்டு, மோகினி ஆட்டம், கோலாட்டம் போன்ற நடனங்களை ஆடி உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.
இந்தப் பாரம்பரிய மிக்க திருநாளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
“பாரம்பரியச் சிறப்பு மிக்க பண்டிகையான ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருவோணத் திரு நாளான இந்நன்னாளில், இல்லந் தோறும் அன்பும் அமைதியும் நிலவட்டும்; மகிழ்ச்சியும் செல்வமும் பெருகட்டும் என்று வாழ்த்தி, மலையாள மொழி பேசும் மக்களுக்கு மீண்டும் ஒரு முறை எனது நெஞ்சம் நிறைந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.