Home நாடு “குடும்பத்தோடு, நடமாட்ட நிபந்தனைகளோடு கொண்டாடுங்கள்” – விக்னேஸ்வரன் ஓணம் பண்டிகை வாழ்த்து

“குடும்பத்தோடு, நடமாட்ட நிபந்தனைகளோடு கொண்டாடுங்கள்” – விக்னேஸ்வரன் ஓணம் பண்டிகை வாழ்த்து

782
0
SHARE
Ad

ஓணம் பண்டிகையை முன்னிட்டு
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன்
வழங்கிய வாழ்த்துச் செய்தி

கேரளாவிலும், நமது சகோதர மலையாள சமூகத்தினரிடையிலும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து மலையாள சமூகத்தினருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மலேசியாவைப் பொறுத்தவரையில் நாம் அனைவரும் இந்தியர்களாக ஒற்றுமையாக ஒருமித்து வாழ்கிறோம். மலையாள சமூகத்தினர் இந்திய சமூகத்தின் ஒரு பிரிவினராக மலேசியாவுக்கு ஆதிகாலம் தொட்டு வழங்கி வந்திருக்கும் பங்களிப்பு அளப்பரியதாகும்.

நமது இந்திய சமுதாயத்தில் அன்றும் இன்றும் பல மலையாள சமூகத்தினர் பல்வேறு துறைகளில் தங்களின் சேவைகளை வழங்கி வந்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

மஇகாவில் பல மலையாள சமூகத்தினர் கட்சிப் பதவிகளையும், அரசாங்கப் பதவிகளையும் அலங்கரித்திருக்கின்றனர். மஇகாவின் உதவித் தலைவராகவும், துணையமைச்சராகவும் இருந்த டத்தோ கு.பத்மநாபன், இரப்பர் ஆராய்ச்சிக்குப் பெரும்பங்காற்றிய டான்ஸ்ரீ பி.சி.சேகர், தோட்டத் தொழிலாளர்களுக்காகவும், தொழிலாளர் இயக்கங்களுக்காகவும் தன் வாழ்நாள் முழுக்கப் போராடியதோடு, அனைத்துலக தொழிலாளர் அமைப்புகளிலும் பெரும் பணியாற்றிய பி.பி.நாராயணன் என பல மலையாள சகோதரர்கள், தங்களின் சேவைகளின்வழி  நமது இந்திய சமுதாயத்தையும் பெருமைப்படுத்தினர்.

மலையாள சமூகத்தினரில் பலர் தமிழ்ப் பள்ளிகளின் வழி கல்வி கற்று, நமது தமிழ் மொழிக்கும், இலக்கியத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் வழங்கியிருக்கின்றனர். எழுத்தாளர்களாகவும், தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களாகவும், பல்கலைக் கழக விரிவுரையாளர்களாகவும், தமிழ் மொழிக்கும் நமது மலையாள சகோதர சமூகத்தினர் சிறந்த பங்களிப்பை வழங்கியிருக்கின்றனர்.

இவ்வாறு மற்ற மலேசிய இந்திய சமூகத்தினரோடு இரண்டறக் கலந்து எல்லாக் களங்களிலும் இந்தியர்களாக, தங்களின் பங்களிப்பை வழங்கியிருப்பவர்கள் நமது மலையாள சமூகத்தினர்.

ஓணம் என்பது பாரம்பரியமாக மலையாள சமூகத்தினர் கேரளாவிலும், தாங்கள் குடியேறிய மலேசியா போன்ற நாடுகளிலும் கொண்டாடும் பண்டிகையாகும். இந்தக் கொண்டாட்டத்தின் பின்னணியில் புராண இதிகாசக் கதையும், மத நம்பிக்கையும் இரண்டறக் கலந்திருக்கின்றன.

அனைத்து மலையாள சமூகத்தினரும் ஓணம் பண்டிகையைத் தங்களின் குடும்பத்தினரோடு சிறப்பாகக் கொண்டாடுவதோடு, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகளுக்கு ஏற்ப நிபந்தனைகளைப் பின்பற்றிக் கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

அனைவருக்கும்  இனிய ஓணம் கொண்டாட்ட நல்வாழ்த்துகள்.

அன்புடன்,

டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன்
தேசியத் தலைவர்
மலேசிய இந்தியர் காங்கிரஸ்