மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் ஓணம் பண்டிகை வாழ்த்துச் செய்தி
மலேசியாவில் வாழும் அனைத்து மலையாள வம்சாவளியினருக்கும் நலமான, வளமான “ஓணம் திருநாள் வாழ்த்துகள்”.
10 நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை மலையாளிகளுக்கு மிக முக்கியமான, உன்னதமான ஒரு பெருநாள் ஆகும். இந்த ஆண்டு ஓணம் பண்டிகை ஆகஸ்டு மாதம் 12-ஆம் தேதி வியாழன் அன்று தொடங்கி 23 ஆம் தேதி திங்கள் அன்று முடிவடைகிறது.
ஓணம் பண்டிகை அறுவடையின் திருவிழா எனவும் அறியப்படுகிறது. உயிரோட்டத்தையும், அழகையும் குறிக்கும் ஓணம் பண்டிகை மகாபலி அரசரின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது. எனவே தியாகத்தை நினைவு கூரும் திருநாளாகவும் இது விளங்குகிறது.
சமத்துவம், சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழும் ஓணம் பண்டிகை, ஒட்டுமொத்த மலேசியர்கள் தற்போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களாகும்.
நாட்டில் நிலவிவரும் சுகாதார, பொருளாதாரப் பிரச்சனையோடு அரசியல் நிலைத்தன்மையும் இணைந்து மக்களைச் சங்கடத்தில் தள்ளியுள்ளது என்பது மறுப்பதற்கில்லை.
ஒற்றுமையாக இருப்பதும், சகோதரத்துவத்தோடு அண்டை அயலாருக்கு இருப்பவர்கள் கொடுத்து உதவுவதும் இக்காலகட்டத்தில் மிக மிக முக்கியம். குறிப்பாக பண்டிகைகளின் போது இந்த எண்ணங்களும், செயல்களும் வெளிப்பட வேண்டும்.
நம்மிடையே இருக்கும் வேற்றுமையை மறந்து, ஒற்றுமையாக ஓணம் பண்டிகையைக் கொண்டாடுவோம். அதுவே மலேசியர்களின் தனித்துவமும் கூட.
கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியில் கோவிட் நடமாட்டக் கட்டுப்பாட்டைப் புறக்கணிக்க வேண்டாம். பொருளாதார நெருக்கடியால் சில வியாபாரங்கள் திறக்கப்பட்டாலும், தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்ப்பது அவரவர் கடமை.
முற்றிலும் கொரோனா தொற்று முறியடிக்கப்படாமல் நாம் சுதந்திரமாக வெளியில் நடமாடும் சூழ்நிலை இல்லை. அதைக் கவனத்தில் கொண்டு அத்திவாசியத் தேவைகளை மட்டுமே தற்போது பூர்த்தி செய்து கொள்வோம்.
ஒற்றுமையாய் இருப்போம், கொரோனாவை ஒழிப்போம்!