Home Featured வணிகம் பயணிகள் கழிவுகள் பெறக் காத்திருந்த “மாட்டா” கண்காட்சி இன்று தொடங்குகிறது!

பயணிகள் கழிவுகள் பெறக் காத்திருந்த “மாட்டா” கண்காட்சி இன்று தொடங்குகிறது!

715
0
SHARE
Ad

Matta fair 2015கோலாலம்பூர் – பெரும்பாலும் வருடத்திற்கு இருமுறை நடத்தப்படும் “மாட்டா” கண்காட்சி சுற்றுலாப் பயணிகளும், விமானப் பயணத்தில் ஆர்வமுள்ளவர்களும் ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நிகழ்ச்சியாகும்.

மலேசிய சுற்றுலா மற்றும் பயண முகவர்களின் சங்கம் (Malaysian Association of Tour and Travel Agents – MATTA) நடத்தும் இந்த மாட்டா கண்காட்சி கோலாலம்பூர் புத்ரா உலக வாணிப மையத்தில் இன்று தொடங்கி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 6ஆம் தேதி வரை நடைபெறும்.

காலை 10.00 மணிக்குத் தொடங்கும் கண்காட்சி இரவு 9.00 வரை நடத்தப்படும். நுழைவுக் கட்டணமாக நபருக்கு 4 ரிங்கிட் வசூலிக்கப்பட்டும். 12 வயதுக்கும் குறைந்தவர்களுக்கு கட்டணம் கிடையாது.

#TamilSchoolmychoice

MATTA FAIRஇந்தக் கண்காட்சியில் பங்குபெறும் விமான சேவை நிறுவனங்களும், பயண நிறுவனங்களும், அதிரடியான சிறப்புக் கழிவுகளை, சுற்றுலாவுகளுக்கும், விமானக் கட்டணங்களிலும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மலேசிய ஏர்லைன்ஸ் பெர்ஹாட் என்ற பெயரில் புதிய நிர்வாகத்தின் கீழ் தனித்துச் செயல்படத் தொடங்கியுள்ள மாஸ் நிறுவனமும் தனது பயண இலக்குகள் அனைத்துக்குமான கட்டணங்களில், 30 முதல் 50 சதவீதம் கழிவுகள் மாட்டா கண்காட்சியின் வழி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

மூன்று நாட்களுக்கு நடைபெறவிருக்கும் இந்த கண்காட்சியில், சுற்றுலாப் பயணங்களில் ஆர்வம் கொண்ட ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, சிறப்புக் கழிவுகளைப் பயன்படுத்திக் கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இருப்பினும், கடந்த சில வாரங்களில் மலேசிய ரிங்கிட் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும் நிலையில், இந்த கால கட்டத்தில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல மலேசியர்கள் அந்த அளவுக்கு ஆர்வம் காட்டுவார்களா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளதாக சில பயண முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய பகுதிகளுக்குச் செல்வதற்கு வழக்கமாக ஆர்வம் காட்டுபவர்கள், அமெரிக்க டாலருக்கு எதிராக கடுமையான வீழ்ச்சியை மலேசிய ரிங்கிட் சந்தித்திருக்கும் இந்த சூழ்நிலையில், வெளிநாடுகளுக்குப் பயணம் போக முண்டியடித்து வருவார்களா என்ற ஐயப்பாடும் எழுந்துள்ளது.