சென்னை – சென்னை வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கிய அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று நிறைவு பெற்றது.
இம்மாநாட்டை முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார்.
மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை முதல் கட்டமாக 8 அரங்குகளில் தனித்தனியாகக் கருத்தரங்குகள் நடைபெற்றன.
1-ஆவது அரங்கில்’ 2023-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் மிகப்பெரும் அடிப்படைக் கட்டுமான திட்டங்கள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
2-ஆவது அரங்கில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் வளர்ச்சி தொடர்பான கருத்தரங்கம் நடந்தது.
3-ஆவது அரங்கில் ‘தமிழ்நாடு உலகப் பொறியியல் மையம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு
4-ஆவது அரங்கில் ‘தமிழ்நாட்டில் விவசாய மற்றும் உணவு பதப்படுத்துதல் துறையில் முதலீட்டு வாய்ப்பு’ என்ற தலைப்பில் கருத்தரங்கு
5-ஆவது அரங்கில் ‘தமிழ்நாட்டில் தகவல் தொழில் நுட்பத் துறை யில் முதலீட்டு வாய்ப்பு’என்ற தலைப்பில் கருத்தரங்கு
6-ஆவது அரங்கில் கனடா நாட்டு பிரதிநிதிகளுடனும், 7-ஆவது அரங்கில் ஆஸ்தி ரேலியா நாட்டுப் பிரதிநிதிகளுடனும் தொழில் தொடர்பான ஆலோசனை அரங்கம் நடந்தது.
8-ஆவது அரங்கில் ’தனியார் பங்களிப்பு, முதலீட்டு வாய்ப்பு’ பற்றிக் கலந்துரையாடல் நடந்தது.
பிற்பகல் 12 மணிக்கு இரண்டாம் கட்ட கருத்தரங்கம் தொடங்கியது.
1-ஆவது அரங்கில் தமிழ்நாட்டில் மின்சாரம் மற்றும் நீர் நிலை வசதிகள் குறித்த கருத்தரங்கம்
2-ஆவது அரங்கில் தொழில் திறன் மேம்பாடு பற்றிய கருத்தரங்கம்
3-ஆவது அரங்கில் மருந்து மற்றும் உயிரி தொழில்நுட்ப துறை கொள்கை மற்றும் முதலீட்டு வாய்ப்பு பற்றிய கருத்தரங்கம்
4-ஆவது அரங்கில் ஜவுளி தொழில் முதலீட்டு வாய்ப்பு பற்றிய கலந்தாய்வு
5-ஆவது அரங்கில் கொரிய நாட்டுத் தொழில் அதிபர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் ஆலோசனை
6-ஆவது அரங்கில் தமிழ்நாட்டில் புதிய தொழில் கட்டுமான வசதிகள் தொழில் பாதைகள், தொழில் பூங்கா, முதலீட்டு வாய்ப்புகள் பற்றிய கருத்தரங்கம்
7-ஆவது அரங்கில் அமெரிக்காவில் உள்ள இந்திய வர்த்தக அமைப்புடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாநாட்டின் நிறைவு விழா இன்று மாலை தொடங்கியது. நிறைவு விழா நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு பேசியதாவது:”
2 நாட்களாக நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர் மாநாடு மிகப் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. கடந்த 2 நாட்களில் மொத்தம் ரூ2,42,160 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
நிர்ணயித்த இலக்கைவிட 2 மடங்கு முதலீடுகள் கிடைக்க உள்ளன. மொத்தம் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்த மாநாட்டில் கையெழுத்தாகியுள்ளன.
தென் மாவட்டங்களில் ரூ 70 ஆயிரம் கோடிக்கான புரிந்துணர்வு ஓப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. மொத்தத்தில் 50%க்கும் அதிகமான முதலீடுகள் தென்மாவட்டங்களில் அமைய உள்ளன.
வேளாண் துறையில் ரூ 800 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது.
மின் உற்பத்தியில் ரூ1.07 லட்சம் கோடிக்கான ஒப்பந்தமும் மீன்வளத்துறையில் ரூ.500 கோடிக்கு ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளன.
மிகப்பெரிய கார் உற்பத்தி மையமாகச் சென்னை உள்ளது. தற்போது சென்னையில் 3 நிமிடத்திற்கு ஒரு கார் தயாராகி வருகிறது. முதலீட்டாளர்களின் சொர்க்க பூமியாகவும், ஆசியாவின் மிகப்பெரிய 3 முதலீட்டு மையங்களில் ஒன்றாகவும் தமிழகம் மாறும் என்பது உறுதி.
மாநாடு வெற்றி பெற உழைத்த அமைச்சர்கள், தொழில் கூட்டமைப்புகள், அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி. மாநாடு வெற்றியோடு நிற்காமல் முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க உடனடியாக முன்வரவேண்டும்” என்றார்.