சென்னை – வைகோ தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று பாரதீய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராசன் கூறியுள்ளார். இதற்கு வைகோ தமிழிசையின் பேச்சுக்கெல்லாம் பதில் சொல்லி என் நேரத்தை வீண்டிக்க விரும்பவில்லை எனப் பதிலடி கொடுத்துள்ளார்.
‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ என்ற முன்னாள் ராணுவத்தினரின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதற்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் தியாகராயநகரில் உள்ள பாரதீய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழிசை சவுந்திரராசன்,
“தமிழகத்தைப் போராட்டக் களத்திலேயே வைத்திருக்க வைகோ விரும்புகிறார். வைகோ தலைமையிலான கூட்டணியில் தற்போதே குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், இவர்கள் எப்படி மக்களைச் சந்திக்கப் போகிறார்கள்.?
அவர்களுடைய கூட்டணி பலம் பெறப் போவதும் இல்லை, தமிழகத்தில் எந்த்த தாக்கத்தையும் ஏற்படுத்திவிடப் போவதும் இல்லை. மாறாகப் பலவீனமாகத் தான் போகப்போகிறது” என்று பேசினார்.
இதுகுறித்துக் கருத்துக் கேட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,”தமிழகப் பாஜக தலைவர் தமிழிசையின் பேச்சுக்குப் பதில் சொல்லித் தன் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை” எனப் பதில் கூறினார்.