சென்னை –சட்டசபையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தனது சேலையைப் பிடித்து இழுப்பதாகவும், அடிக்க வருவதாகவும் காங்கிரஸ் பெண் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி பரபரப்பான புகார் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், இவ்வளவு நடந்தும் எதுவும் தெரியாதவர் போல முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை வாசித்துக் கொண்டிருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்று சட்டசபையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சட்டசபையிலிருந்து வெளியேறிய விஜயதாரணி, அதிமுக உறுப்பினர்களைப் பற்றிப் பல புகார்களைச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“முதலமைச்சர் காவல்துறை மானியத்தைப் பற்றிப் பேசிய பிறகு, எனக்குப் பேச வாய்ப்பு அளிக்கும்படி சபாநாயகரிடம் கேட்டேன். ஆனால், சபாநாயகர் வாய்ப்புத் தரவில்லை.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சட்டப்பேரவை நுழைவு வாயிலில், மறியலில் ஈடுபட்டபோது, என் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த மறியல் போராட்டத்தில் தாக்குதல் எதுவும் நடக்காதது போல் முதல்வர் ஜெயலலிதா அறிக்கையைப் படித்துக் கொண்டிருந்தார்.
இது தொடர்பாக நான் கேள்வி கேட்க எழுந்த போது, எனக்குப் பேச வாய்ப்புத் தரவில்லை. அதுமட்டுமல்லாமல் அப்போது அதிமுக உறுப்பினர்கள் என்னைக் கேலியும், கிண்டலும் செய்தனர்; என்னை வாய் கூசும் அசிங்கமான வார்த்தைகளால் ஏசினார்கள்.
சிலர் என் புடவையைப் பிடித்து இழுத்தார்கள்; அடிக்கவும் வந்தார்கள்.
சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பில்லை” என்று அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்தார்.