சான் ஜோசே – கலிபோர்னியா மாநிலத்தின் சிலிக்கோன் பள்ளத்தாக்கில் உள்ள தொழில் நுட்ப நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வருகை மேற்கொண்டிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று டெஸ்லா மின்சாரக் கார் தொழிற்சாலைக்கு வருகை தந்தார்.
டெஸ்லா கார்கள் மின்கலங்களைக் (பேட்டரி) கொண்டு இயங்குபவை. நவீன தொழில் நுட்பத்தில் இயங்கும் இந்தக் கார்கள் எதிர்காலத்தில் கார் தொழிலில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கார் தொழிற்சாலையை மோடிக்குச் சுற்றிக் காண்பித்தார் டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலோன் மஸ்க் (படம்).
டெஸ்லா கார்களுக்குப் பயன்படுத்தப்படும் மின்கலத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு எப்படி பயன்களைக் கொண்டுவர முடியும் என்பதைத் தான் கேட்டறிந்ததாக மோடி தனது டுவிட்டர் அகப் பக்கத்தில் தெரிவித்திருக்கின்றார்.
டெஸ்லா கார் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலோன் மஸ்க்கும் தனது டுவிட்டர் பக்கத்தில், சூரிய சக்தியால் இயங்கும் மின்கலங்கள் தொடர்பிலும், கிராமப்புறங்களில் விவசாயிகளுக்கு நன்மை தரும் விதங்களில் அவற்றைப் பயன்படுத்துவது குறித்தும் பயனான கருத்துப் பரிமாற்றங்களை மோடியுடன் நிகழ்த்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
(படங்கள்: டுவிட்டர்)
-செல்லியல் தொகுப்பு