மாலி – இன்று நடைபெற்ற படகு குண்டுவெடிப்பு சம்பவத்தில் மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் மயிரிழையில் உயிர்த் தப்பியுள்ளார். எனினும் அவரது மனைவியும், இரு பாதுகாவலர்களும் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.
சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரை முடிந்து இன்று புதுடெல்லி விமானம் நிலையம் சென்ற அப்துல்லா யாமீன், பின்னர் தனது அதிகாரப்பூர்வப் படகு மூலம், மாலத்தீவிற்குப் பயணம் செய்தார்.
அவரை வரவேற்க மாலி படகுத் துறையில் முக்கியப் பிரமுகர்களும், பத்திரிக்கையாளர்களும் காத்திருந்தனர். அப்போது அவர்கள் கண் முன்னேயே அப்படகு வெடித்ததாகக் கூறப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் அதிபர் அப்துல்லா யாமீன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இவ்விபத்தில் காயமடைந்த அதிபரின் மனைவி பாத்திமா இப்ராஹிம், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூம் மற்றொரு படகின் மூலம் பத்திரமாக மாலத்தீவு தலைநகரான மாலே சென்றடைந்ததாக டெல்லியில் உள்ள மாலத்தீவு தலைமை தூதர் தெரிவித்துள்ளார்.