சென்னை – இலங்கையில் இறுதிப் போரின் போது பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்கள் ஈவு இரக்கமின்றி இலங்கை ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் குறித்து அனைத்துலக விசாரணை தேவையில்லை; உள்நாட்டு விசாரணையே போதுமென அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தைக் கண்டித்து சென்னையில் இன்று அமெரிக்கத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் வைகோ தலைமையில் நடந்தது.
இதில் ம.தி.மு.க., மே 17 இயக்கம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்பட பல்வேறு தமிழ் அமைப்புகள் கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்தின் போது, அமெரிக்காவைக் கண்டித்தும் ராஜபக்சேவைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பியபடி,ராஜபக்சே மற்றும்அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோரது உருவப் பொம்மைகளைப் போராட்டக்காரர்கள் எரித்தனர்.
எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திலிருந்து முழக்கமிட்டபடி சென்று, அமெரிக்கத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற வைகோ உள்பட 1000 பேருக்கும் மேற்பட்டோரைக் காவல்துறையினர் கைது செய்து, அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்தனர்.