கோலாலம்பூர்- 1எம்டிபி விவகாரம் தொடர்பாக விமர்சித்த மசீச முன்னாள் தலைவர் லிங் லியோங் சிக் மீது அவசர கதியில் வழக்கு தொடுத்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப், வால் ஸ்டிரீட் பத்திரிகை மீது வழக்கு தொடுப்பதில் ஏன் இந்த வேகம் காட்டவில்லை என ஜசெக கேள்வி எழுப்பியுள்ளது.
லிங் லியோங் சிக் மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தி மிக வேகமாக கடிதம் அனுப்பிய பிரதமர், அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 2.6 பில்லியன் ரிங்கிட் செலுத்தப்பட்டதாக கடந்த ஜூலை தொடக்கத்தில் தகவல் வெளியிட்ட வால் ஸ்டிரீட் பத்திரிகை மீது இன்றுவரை வழக்கு தொடுக்கவில்லை என ஜசெக நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் சுட்டிக்காட்டி உள்ளார்.
இது குறித்து பிரதமரை அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் கேள்வி கேட்பார்களா? என்று வினவியுள்ள கிட் சியாங், தனது கருத்துக்களை திரும்பப் பெற டாக்டர் லிங்குக்கு 7 நாட்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டிருப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போது நிகழ்ந்துள்ள நிதி முறைகேட்டிற்குப் பொறுப்பேற்று பிரதமர் நஜிப் பதவி விலக வேண்டும் என்ற துன் மகாதீரின் கருத்துடன் தாம் ஒத்துப்போவதாக கடந்த சனிக்கிழமை டாக்டர் லிங் கூறியிருந்தார்.
“பிரதமர் நஜிப் மக்களின் பணத்தை எடுத்துள்ளார்,” என லிங் கூறியதாக மலேசிய கினி செய்தி வெளியிட்டிருந்தது.
இதற்கிடையே கிட் சியாங் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், நஜிப்பிடம் அவரது அமைச்சரவை சகாக்கள் கேட்க வேண்டிய பத்து கேள்விகளைப் பட்டியலிட்டுள்ளார்.
1எம்டிபி விவகாரம் தொடர்பில் வெள்ளை அறிக்கை வெளியிடுதல், மோசமடையும் புகைமூட்ட பிரச்சினை, அட்டர்னி ஜெனரல் டான்ஸ்ரீ அப்துல் கனியை பணி நீக்கம் செய்தது உள்ளிட்ட விஷயங்கள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.