பாஸ்டன்- நடு வானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீர் மாரடைப்பு காரணமாக தலைமை விமானி மரணமடைந்தார். இதையடுத்து துணை விமானி மிக சாதுர்யமாகச் செயல்பட்டு அந்த விமானத்தை தரையிறக்கினார்.
அமெரிக்காவின் ஃபீனிக்ஸ் நகரிலிருந்து பாஸ்டன் நோக்கி சென்று கொண்டிருந்தது அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அந்த ஏர்பஸ்320 ரக விமானம்.
அதில் 147 பயணிகளும் 5 விமானப் பணியாளர்களும் இருந்தனர். பல ஆயிரம் அடி உயரத்தில் விமானம் வேகமாக சென்று கொண்டிருந்த நிலையில், அதன் தலைமை விமானி திடீரென தன் நெஞ்சை பிடித்துக் கொண்டு இருக்கையிலேயே சரிந்தார். இதைக் கண்ட துணை விமானி உடனடியாக விமானத்தை தனது முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்.
இதையடுத்து அந்த விமானத்தில் பயணம் செய்த செவிலியர் ஒருவரை விமானிகள் அறைக்குள் அழைத்து வந்து தலைமை விமானிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முற்பட்டார் துணை விமானி.
எனினும் மாரடைப்பு ஏற்பட்ட சில நொடிகளிலேயே தலைமை விமானியின் மூச்சு அடங்கவிட்டது. இதனால் விமானக் குழுவினர் சோகத்தில் மூழ்கினர்.
இதன் பின்னர் அருகிலுள்ள விமான நிலையத்தை தொடர்பு கொண்டார் துணை விமானி. சூழ்நிலையை விவரித்து தரையிறங்க அனுமதி கேட்டார். இதையடுத்து சிராகஸ் நகர விமான நிலையில் அந்த விமானம் தரையிறங்கியது.