நேற்று ஷா ஆலாமில் உள்ள மருத்துவமனையில் “உலக கண்பார்வை தினம்” தொடர்பான நிகழ்ச்சிகளைத் தொடக்கி வைத்த பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது, டாக்டர் சுப்ரா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மஇகாவை ஆட்டிப் படைத்த அணி என்ற பிணி
அப்போது தேசியத் துணைத் தலைவராக இருந்த டத்தோ (டான்ஸ்ரீ) சுப்ராவுக்கும் சாமிவேலுவுக்கும் இடையிலான அரசியல் போட்டி அத்தகைய ஒரு முடிவை சாமிவேலு எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அவரை ஆளாக்கியது.
இதன் காரணமாகவே, எல்லாக் காலங்களிலும் மஇகாவை அணி என்ற பிணி ஆட்டிப் படைத்தது.
அதன்பின்னர், தலைமைப் பொறுப்பை ஏற்ற டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவும் அவர் நடத்திய முதலும், கடைசியுமான 2013 கட்சித் தேர்தலில், அனைவருக்கும் பொதுவாக இருப்பேன் என முதலில் அறிவித்து விட்டு பின்னர் மத்திய செயற்குழுவுக்குப் போட்டியிட்டவர்களில் தனக்கு வேண்டியவர்கள் என ஒரு குழுவுக்கு மட்டும் ஆதரவளித்தார்.
உதவித் தலைவர்களில் மூவரை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களுக்காக பகிரங்கமாக பிரச்சாரம் செய்தார்.
அதன் பின்விளைவுகள் என்ன என்பதை நாடே பார்த்தது!
ஆனால், கடந்த கால மஇகா அரசியலில் இருந்து பாதை மாறி, இப்போது, சுப்ரா யாருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்ற திட்டவட்டமான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றார்.
யாரை ஆதரிப்பது? இக்கட்டான நிலைமையில் சுப்ரா!
உதாரணத்திற்கு, தேசியத் துணைத் தலைவர் பதவியை எடுத்துக் கொண்டால், சரவணன், தேவமணி இருவருமே பழனிவேலுவுக்கு எதிரான கட்சிப் போராட்டத்தில் சுப்ராவுக்கு தோள் கொடுத்தவர்கள் – துணை நின்றவர்கள்!
இவர்கள் இருவரில் யாரை ஆதரிப்பது, யாரை விடுவது? என்ன காரணம் சொல்லி, ஒருவரை ஆதரிப்பது?
அடுத்ததாக, தேசிய உதவித் தலைவருக்கான போட்டியில் குதித்திருப்பவர்களைப் பார்த்தால், டி.மோகன், விக்னேஸ்வரன், வேள்பாரி என மூவருமே ஒவ்வொரு வகையிலும் அரசியல் ரீதியாக சுப்ராவின் தலைமைத்துவத்திற்கு ஆதரவு கொடுத்தவர்கள்.
அந்த நன்றிக் கடனை நினைத்துப் பார்த்தால், சாமிவேலுவின் மகனான வேள்பாரிக்கு சுப்ரா ஆதரவளித்தாக வேண்டும்.
விக்னேஸ்வரனும், ஒரு முக்கியமான காலகட்டத்தில், பழனிவேல் சங்கப் பதிவகத்திற்கு எதிராகத் தொடுத்த வழக்கில் மூன்றாவது தரப்பாக நுழைந்து, அந்த வழக்கு சுப்ரா தரப்பினருக்கு சாதகமாக முடிவதற்கு துணை நின்றார். அதற்காக சுப்ரா விக்னேஸ்வரனையும் உதவித் தலைவர் தேர்தலில் ஆதரித்தாக வேண்டும்.
உதாரணமாக, உதவித் தலைவருக்குப் போட்டியிட உத்தேசித்திருக்கும் டத்தோ ஜஸ்பால் சிங்கும் சுப்ராவுக்கு பல வழிகளிலும் உறுதுணையாக இருந்து வருபவர்.
தேசியத் தலைவர் அறிமுகப்படுத்தும் புதிய ஜனநாயக கலாச்சாரம்
இந்த சூழ்நிலையில்தான், துணிந்து, தனது தலைமைத்துவத்தை பாரபட்சமின்றி, நியாயமாக, நிலைநாட்டுவதற்காக, யாரையும் ஆதரிக்கப் போவதில்லை – அங்கீகாரம் என்ற முத்திரை குத்தப் போவதில்லை – என்ற முடிவை எடுத்திருக்கின்றார் சுப்ரா.
இறுதி வரை, தனது முடிவிலிருந்து விலகாது, உறுதியாக இருந்து, மறைமுகமாகவோ, இரகசியமாகவோ, யாருக்கும் எந்தவகை உத்தரவையும் வழங்காது –
இந்தக் கட்சித் தேர்தலை நடத்தி முடித்துவிட்டால், அதன் மூலம், மஇகாவில் புதிய முறையிலான ஜனநாயகம் மலர்வதற்கும் – இதுவரை கட்சி காணாத புதிய தேர்தல் கலாச்சாரம் உருவாவதற்கும் வித்திட்டவராக சுப்ரா பார்க்கப்படுவார்.
அவரது அத்தகைய நடைமுறை செயலாக்கப்படுவதன் மூலம், கட்சியும் வலுவானதாக, புதிய பொலிவுடன் – புதிய தோற்றத்துடன் ஏற்றம் பெறும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
பேராளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியும்!
தேசியத் தலைவரின் அணியில் இடம் பெற வேண்டும், ஆதரவைப் பெற வேண்டும் என ஒரு சில வேட்பாளர்கள் முண்டியடித்துக் கொண்டிருக்கும் நிலைமையும் மாறும்.
அவ்வாறு, தேசியத் தலைவரின் அணியில் இடம் பெறும் – திறமையற்ற ஒரு சில வேட்பாளர்களும் – தேசியத் தலைவரின் நிழலிலேயே குளிர்காய்ந்து கொண்டு, களத்தில் இறங்கி பணியாற்றாமல், ஜாலியாக வென்றுவிடும் – கடந்த கால மஇகா கலாச்சாரத்திற்கும் ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்படும்.
அப்படி மலர்ந்தால் – அது கட்சியை மேலும் வலுவானதாக – சிறப்பானதாக உருமாற்றுமே தவிர – அதனால் கட்சியில் பின்னடைவுகளோ – பிளவுகளோ ஏற்படாது.
தேசியத் தலைவர் வகுக்க முனைந்துள்ள இந்த புதிய ஜனநாயக நடைமுறையை கட்சியின் மற்ற தலைவர்களும் பின்பற்ற வேண்டும். அப்போதுதான், கட்சியில் முகிழ்த்துள்ள இந்த புதிய கலாச்சாரம் ஆழமாக வேரூன்ற முடியும்.
குறிப்பாக, தேர்தலில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்களும் தங்களின் திறமைகளையும், தாங்கள் என்ன செய்யப் போகின்றோம் என்பதையும் முன்வைத்துப் போட்டியிட வேண்டுமே ஒழிய,
அணி சேர்த்துக் கொண்டோ, தனக்கென வேண்டிய ஒரு சிலருக்கு மட்டும் ஆதரவளித்தோ, தேர்தல் களத்தில் இறங்கக் கூடாது.
அவ்வாறு நிகழுமானால், தேசியத் தலைவர் சுப்ரா அறிமுகப்படுத்த நினைக்கும் ஜனநாயக மறுமலர்ச்சி கட்சியில் வெற்றி பெறாமல் போகக கூடிய நிலைமைதான் ஏற்படும் என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கணிப்பாக இருக்கின்றது.
-இரா.முத்தரசன்