Home Featured நாடு “எங்கள் மகளின் எலும்புகள் தான்” – ஓராங் அஸ்லி குழந்தையின் பெற்றோர் உருக்கம்!

“எங்கள் மகளின் எலும்புகள் தான்” – ஓராங் அஸ்லி குழந்தையின் பெற்றோர் உருக்கம்!

530
0
SHARE
Ad

குவா முசாங்- பள்ளி விடுதியிலிருந்து திடீரென மாயமான ஓராங் அஸ்லி குழந்தைகளை தேடும் பணி இன்னும் முடிவுக்கு வரவில்லை.

இந்நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகள் காணாமல் போன தங்களது ஏழு வயது மகள் ஜுவினாவினுடையது என அக்குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

main_ax_1210_P4c_40p_ax_1

#TamilSchoolmychoice

ஜுவினாவின் தந்தை டேவிட் (32 வயது), தாய் ஷீலா ஓமர் (26 வயது) ஆகிய இருவரும் எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ள நெக்லஸ் மற்றும் ரப்பர் பிரேஸ்லெட் ஆகியவை தங்கள் மகள் ஜுவினா அணிந்திருந்தவை என உறுதி செய்துள்ளனர்.

“இவ்விரு பொருட்களின் அடிப்படையில் குறிப்பிட்ட அந்த எலும்புகள் எங்கள் மகளுடையதாக இருக்கலாம் என மீட்பு மற்றும் தேடுதல் குழுவிடம் என் மனைவி தெரிவித்துள்ளார். அதே வேளையில் எலும்புகளுடன் கண்டெடுக்கப்பட்ட உடைகளின் நிறம் மங்கிப் போய்விட்டதால் அவை எங்களது மகளுடையதா என்பதை உறுதி செய்ய முடியவில்லை” என்றார் டேவிட்.

மாயமான ஏழு குழந்தைகளில், கடந்த வெள்ளிக்கிழமை இருவர் மீட்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் பத்து மீட்டர் தொலைவில், இந்த எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மாயமான ஏழு பேரில், மூன்று பேரின் நிலைமை இதுவரை தெரியவில்லை. ஜுவினா, லிண்டா ரோஸ்லி (8 வயது), ஹைக்கல் யாகோப் (8 வயது) ஆகிய மூவரையும் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள எலும்புகள் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளன. அதன் முடிவு தெரியும் வரை காத்திருக்கப் போவதாக டேவிட் கூறியுள்ளார்.

படம்: நன்றி பெர்னாமா