நியூ யார்க் – அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இரண்டாவது ஆட்சி காலமும் ஏறக்குறைய முடிவிற்கு வந்துவிட்டது. அடுத்த அமெரிக்க தலைமை யார்? என ஒட்டுமொத்த அமெரிக்காவும் பரபரப்பாக விவாதித்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டின் மிகப் பெரிய எதிரியாக இருக்கும் பருவநிலை மாற்றம் தொடர்பாக தனது கருத்துக்களைத் தெரிவிக்கவும், விவாதங்களை மேற்கொள்ளவும் ஒபாமா பேஸ்புக்கில் இணைந்துள்ளார்.
கடந்த மே மாதம் டுவிட்டரில் இணைந்த ஒபாமாவிற்கு மிகப் பெரிய அளவில் வரவேற்பு இருந்தது. இந்நிலையில், பருவநிலை மாற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே பேஸ்புக்கில் இணைந்துள்ளதாக காணொளி ஒன்றின் மூலம் அவர் தெரிவித்துள்ளார்.
‘ஹலோ ஃபேஸ்புக்’ என்று தொடங்கு அந்த காணொளியில் அவர், “நம் நாடு சந்திக்கும் மோசமான பிரச்னைகள் குறித்து நாம் நேரடியாக விவாதிக்கலாம் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அவர் பேஸ்புக்கில் இணைந்த சிறிது நேரத்திற்குள்ளாக, அவரின் பக்கத்தை 2 லட்சம் பேர் லைக் (Like) செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.