கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய ஆபாச வலைப்பதிவாளர் ஆல்வின் டானுக்கு மனநல சிகிச்சையோ அல்லது ஆன்மீக ரீதியிலான ஆலோசனைகளோ தேவை என மசீசா தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மதநல்லிணக்கப் பிரிவின் தலைவர் டத்தோஸ்ரீ டி லியான் கெர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டான் ஒரு மனநோயாளி (Sicko – சிக்கோ) என்று வர்ணித்துள்ளார்.
“அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் அடையும் உனது விண்ணப்பம் உனது அநாகரிகமான செயலால் நிராகரிக்கப்படும்” என்று டானை விமர்சித்து லியான் கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஆல்வின் டான் தனது பேஸ்புக் பக்கத்தில், இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை இழிவுபடுத்தும் படி, சில அநாகரிகமான செயலை செய்து அதை புகைப்படமெடுத்து பதிவு செய்திருப்பது பலரையும் ஆத்திரமடையச் செய்துள்ளது.
இந்நிலையில், மலேசியர்கள் அனைவரும் ஆல்வின் டானின் விஷமத்தனமான செயல்களை பெரிது படுத்தக் கூடாது என்றும், இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாம் அல்லாதவர்களுக்கும் இடையே தவறான புரிதலை ஏற்படுத்த முயற்சி செய்கிறார் என்றும் லியான் தெரிவித்துள்ளார்.