Home Featured கலையுலகம் “எனது கல்லீரல் 25 விழுக்காடு தான் செயல்படுகிறது” – வருந்திய அமிதாப்பச்சன்!

“எனது கல்லீரல் 25 விழுக்காடு தான் செயல்படுகிறது” – வருந்திய அமிதாப்பச்சன்!

817
0
SHARE
Ad

amitabhமும்பை – தனது கல்லீரல் 75 விழுக்காடு அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த பல ஆண்டுகளாக 25 விழுக்காடு கல்லீரல் செயல்பாட்டுடன் தாம் வாழ்ந்து வருவதாகவும் நடிகர் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார்.

இதை அறிந்து ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்தினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மஞ்சள் காமாலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியபோதே அவர் இத்தகவலை வெளியிட்டார்.

கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு ‘கூலி’ படத்தில் நடித்தபோது விபத்தில் சிக்கியதாகவும், அப்போது தனது உயிரைக் காப்பாற்ற நிறைய ரத்தம் தேவைப்பட்டதாகவும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“ஏறத்தாழ 200 பேரிடம் இருந்து எனக்காக ரத்தம் பெறப்பட்டது. மொத்தம் 60 பாட்டில் ரத்தம் எனக்கு ஏற்றப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு நான் உயிர் பிழைத்துக் கொண்டேன்” என்று குறிப்பிட்ட அமிதாப், அவ்வாறு ரத்தம் பெற்றதன் காரணமாகவே தனக்கு ஹெப்படிடிஸ் எனப்படும் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.

தமக்கு ரத்தம் கொடுத்த யாரோ ஒருவருக்கு ஹெப்படிடிஸ் வைரஸ் தாக்கம் இருந்ததாகவும், அதன் காரணமாக தன்னையும் கல்லீரலைப் பாதிக்கும் அந்நோய் தாக்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.

“இதன் காரணமாகவே எனது கல்லீரல் பாதிப்பு அடைந்தது. அந்த பாதிப்பானது 12 விழுக்காடாக இருந்தபோதே கண்டுபிடித்திருந்தால் நான் இந்தப் பிரச்சினையில் இருந்து மீண்டிருக்கலாம். ஆனால் கவனிக்காமல் இருந்ததால் காலம் கடந்துவிட்டது.”

“தற்போது எனது கல்லீரல் 75 விழுக்காடு பாதிக்கப்பட்டுள்ளது. விழிப்புடன் இருந்திருந்தால் இந்நிலை வந்திருக்காது. தற்போது நான் 25 விழுக்காடு செயல்பாட்டில் உள்ள கல்லீரலுடன் வாழும் நிலைக்கு ஆட்பட்டுள்ளேன். என்றாலும், நான் அதைப் பற்றி கவலைப்படாமல் எப்போதும் போலவே எனது செயல்களைச் செய்து வருகிறேன்” என்று அமிதாப் மேலும் தெரிவித்துள்ளார்.