Home Featured நாடு மஇகா: புதிய தலைமைச் செயலாளர்-தலைமைப் பொருளாளர் யார்? அதிக எதிர்பார்ப்புடன்  நாளை கூடுகிறது மஇகா மத்திய...

மஇகா: புதிய தலைமைச் செயலாளர்-தலைமைப் பொருளாளர் யார்? அதிக எதிர்பார்ப்புடன்  நாளை கூடுகிறது மஇகா மத்திய செயற்குழு!

571
0
SHARE
Ad

கோலாலம்பூர் — நாளை சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு மஇகா தலைமையகத்தில் கூடவிருக்கும் மத்திய செயலவைக் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றது. காரணம், கடந்த நவம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற மஇகா மறு-தேர்தல்களுக்குப் பின்னர் நடைபெறும் முதல் மத்திய செயலவைக் கூட்டம் இது என்பதோடு, கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் நியமனம் காணப்போகும், மத்திய செயலவையும் இதுதான்.

Subramaniam-MICபுதிய தலைமைச் செயலாளர், புதிய தலைமைப் பொருளாளர், தகவல் பிரிவுத் தலைவர் ஆகிய மூன்று முக்கிய பதவிகளுக்கு தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் யாரை நியமிக்கப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடையே தற்போது பரவலாக மேலோங்கியிருக்கின்றது.

இந்தப் பதவிகள் தவிர, 9 மத்திய செயலவை உறுப்பினர்களை மத்திய செயலவையில் நியமிக்கும் அதிகாரத்தையும் டாக்டர் சுப்ரா கொண்டுள்ளார். அவர்கள் யாராக இருக்கக்கூடும் என்ற ஆரூடங்களும் தற்போது கட்சியினரிடையே பரவி வருகின்றன.

#TamilSchoolmychoice

இந்த நியமனங்கள் தவிர, கட்சியின் துணைக் குழுக்கள் சிலவற்றையும், அவற்றுக்கான பொறுப்பாளர்களையும் தேசியத் தலைவர் நியமிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த காலங்களில், மஇகா சட்டவிதித் திருத்தக் குழு, ஒழுங்கு நடவடிக்கைக் குழு, கலாச்சாரக் குழு, போன்ற துணைக் குழுக்கள் மஇகா மத்திய செயலவையால் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தன.

இந்த முறையும் அதே பாணியிலான சில குழுக்களும் அதற்கான தலைவர்களும் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மாநிலத் தலைவர்கள் நியமனம்!

மாநில ரீதியிலான சில மாற்றங்களும் செய்வதற்கு டாக்டர் சுப்ரா உத்தேசித்துள்ளார் என மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, மஇகா கூட்டரசுப் பிரதேசத்தின் மாநிலத் தலைவராக டத்தோ எம்.சரவணன் மீண்டும் நியமிக்கப்படுவாரா அல்லது மாற்றப்படுவாரா என்ற பரபரப்பில் மஇகா கூட்டரசுப் பிரதேசக் கிளைகள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றன.

தற்போது சிலாங்கூர், மலாக்கா மாநிலங்களின் தலைமைப் பொறுப்பை தேசியத் தலைவர் டாக்டர் சுப்ராவே ஏற்றுக் கொண்டிருக்கின்றார். இந்தப் பொறுப்புக்களில் அவரே தொடர்வாரா அல்லது வேறு யாராவது புதிதாக நியமிக்கப்படுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மற்ற மாநிலங்களிலும் ஒருசில மாற்றங்கள் செய்யப்படும் என்ற கருத்து நிலவுகின்றது.

இந்த நியமனங்கள் தவிர பல முக்கிய அறிவிப்புகளையும் டாக்டர் சுப்ரா நாளை மத்திய செயலவைக் கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.