கோலாலம்பூர் – சிறு வயதில் இருந்தே உடல்பருமனாக இருக்கும் ஒரு பெண், பள்ளி நாட்கள் தொடங்கி சமுதாயத்தில் அவள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும், அதனால் அவள் எடுக்கும் முடிவுகளும் தான் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் கதை.
இன்றைய பாஸ்ட் புட் காலத்தில் இடுப்பு தான் மனிதனின் பெரும் பிரச்சனையே.. வயிற்றின் சுற்றளவு எவ்வளவுக்கு எவ்வளவு அதிகரிக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆயுள் குறைகிறது என்கிறது மருத்துவம். ஆனால் அதைக் குறைக்க நாம் தேர்ந்தெடுக்கும் அவசர வழி முறைகளோ இன்னும் மோசமான விளைவுகளைத் தந்துவிடுகின்றது. அதையும் இப்படமும் முன்னிறுத்துகிறது.
இப்படியாக, சமுதாயத்தில் இன்று மக்களுக்கு இருக்கும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றை மையமாக வைத்து படத்தை உருவாக்கியுள்ள இயக்குநர் பிரகாஷ் கோவலமுடி, அதை எந்த அளவிற்கு சுவாரஸ்யமாகவும், ரசிக்கும்படியாகவும் கொடுத்திருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.
நடிப்பு
‘ஸ்வீட்டி’ கதாப்பாத்திரத்தில் அனுஷ்கா மிகவும் பியூட்டியாக நடித்திருக்கிறார். முகத்தளவில் கேமரா உள்ளவரை தெரியாத வித்தியாசம் முழு அழகையும் காட்டும் போது இப்படத்திற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளையும், துணிச்சலையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. 92 கிலோவில் கொழுக்கு மொழுக்கென்று திரையில் தோன்றும் போது அவரை நாம் ரசிக்க முடியாமல் போவதே, அனுஷ்காவின் உழைப்பிற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று சொல்லலாம்.
பொதுவாக உடல் பருமனாக இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் எந்த ஒரு ஈகோவும் இன்றி, எளிதில் எல்லோருடனும் பழகும் குணமும், கவலையின்றி எப்போது சந்தோஷமாக இருக்கும் மனமும் கொண்டிருப்பார்கள்.ஆனால் அப்படிப்பட்டவர்களும் சில நேரம் யாருக்கும் தெரியாத வகையில் அழுவார்கள் என்பதை உணர்வுப் பூர்வமாக ஒரு காட்சியில் நடித்திருக்கிறார் அனுஷ்கா.
“அலுத்துப்போச்சு அபி… எல்லார்கிட்டையும் ஜஸ்ட் பிரண்டாவே இருந்து அலுத்துப் போச்சு” என்று கண்களில் நீரோடு அனுஷ்கா சொல்லும் வார்த்தை வலியின் உச்சம்.
ஆர்யா .. அபி கதாப்பாத்திரத்திற்குப் பொருத்தமான தேர்வு.. ஆர்யா காதலை வெளிப்படுத்தும் காட்சிகள் அழகு. மற்றபடி, கதையில் ஹீரோயிசம் செய்யும் படியான காட்சிகள் குறைவு. திரையை முழுக்க முழுக்க 92 கிலோ அனுஷ்கா தான் நிறைத்திருக்கிறார்.
அடுத்ததாக, அனுஷ்காவின் அம்மாவாக ஊர்வசியின் நடிப்பு மிகவும் ஈர்த்தது. பெண்ணுக்கு விரைவில் கல்யாணம் நடத்திப் பார்க்க வேண்டும் என்ற ஒரு தாயின் தவிப்பும், அதை தனது மகள் புரிந்து கொள்ள மறுக்கிறாளே என்ற கவலையும் அவரது கதாப்பாத்திரம் மூலமாக சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அனுஷ்காவின் தம்பியாக வரும் மாஸ்டர் பரத். அவ்வளவு அழகாக நடித்திருக்கிறார். இந்தக் கதை நிஜமாகவே அவரது வாழ்வில் நடந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. சில வருடங்களுக்கு முன் குண்டுப் பையனாக இருந்தவர். இப்போது ஆளே மாறிப் போய் விட்டார். உடல் எடை குறைத்து தோற்றத்திலும், நடிப்பிலும் அசத்துகிறார். சரியான பாதையைத் தேர்ந்தெடுத்தால் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்துவிடலாம்.
இவர்களைத் தவிர சைஸ் சீரோ சத்யானந்தாக பிரகாஷ்ராஜ், தாத்தாவாக கொல்லப்படி மாருதி ராவ், சிம்ரனாக சோனால் சௌஹான் போன்ற நட்சத்திரங்களும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். படத்தில் ஒரு பாடலில் நாகர்ஜூனா, ஜீவா, தமன்னா என பல பிரபலங்களும் கௌரவ வேடத்தில் வந்து போகின்றனர்.
திரைக்கதை
நல்ல கதையம்சம் கொண்ட ஒரு படமாக இருந்தாலும், அதை மக்கள் ரசிக்கும் படியாக விறுவிறுப்பான காட்சிகளோடு நகர்த்திச் செல்ல திரைக்கதை தவறிவிட்டது என்றே சொல்லலாம். அதற்கு எந்தப் பாதையில் கதையை நகர்த்திச் செல்வது என்ற குழப்பம் ஒரு காரணமாக இருக்கலாம்.
உடல்பருமான இருக்கும் அனுஷ்காவின் தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சொல்வதா?, குண்டுப் பெண்ணான அனுஷ்காவிற்கும், சிக்ஸ்பேக் ஆணான ஆர்யாவிற்கும் இடையிலான காதலை அழுத்தமாகச் சொல்வதா?, ஒரே வாரத்தில் ‘சைஸ் சீரோ’ ஆக்குகிறோம் என்று மக்களின் பணத்தையும், ஆரோக்கியத்தையும் பிடுங்கும் சில தனியார் அழகு நிறுவனங்களின் போலித்தனத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதா? என்று குழம்பிய திரைக்கதை, எல்லாவற்றிலும், மேலோட்டமாக நகர்ந்து செல்வது தான் அதன் பலவீனம்.
அண்மையில் வெளியான ’36 வயதினிலே’ படத்தை உதாரணமாக எடுத்துக் கொண்டால், ஒரு குடும்பப் பெண் அவளது வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள், அதனை அவள் எதிர்க்கொள்ளும் விதம் என படம் பார்ப்பவர்களுக்கு ஒரு ஊக்கமாகவும், உதாரணமாகவும் அமைந்தது. அப்படி ஒரு சுவாரஸ்யத்தை ‘இஞ்சி இடுப்பழகி’ தரவில்லை.
ஒளிப்பதிவு
நீரவ் ஷா ஒளிப்பதிவு அழகு.. பாடல் காட்சிகளில் பரவசத்தை ஏற்படுத்துகின்றது. ‘சைஸ் சீரோ’ பாடலும், ‘சைஸ் செக்ஸி’ பாடலும் காட்சிகளால் மிகவும் கவர்கின்றது. அதிலும் ‘சைஸ் செக்சி’ பாடலில் உண்மையாகவே அனுஷ்கா செக்சி தான்..
கீரவாணி இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே ரகம்..
மொத்தத்தில், படத்தில் உடல் பருமன் பிரச்சனை, உடல் எடை குறைப்பு மருந்துகள் பற்றிய விழிப்புணர்வு, பிட்னஸ் பிரச்சாரம், காதல், கவர்ச்சி என எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து ஒரு கலவையாக படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இவற்றில் தனிப்பட்ட முறையில் ஏதாவது ஒன்றை மட்டும் அதிகமாக எதிர்பார்த்துச் சென்றால் ஏமாற்றமே!
– ஃபீனிக்ஸ்தாசன்