பாரிஸ் – பாரிஸ் நகரில் பருவநிலை பாதுகாப்பு உச்சி மாநாடு நடந்து வரும் அதேவேளையில், பில்கேட்ஸ் தலைமையில் உலக கோடீஸ்வரர்கள் புவியின் பருவ நிலையை பாதுகாக்க எரிசக்தி கூட்டணி (Energy Coalition) ஒன்றை உருவாக்கி உள்ளனர்.
இந்த அமைப்பின் மூலம் பில் கேட்ஸ், ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி, ஜேக் மா உட்பட 28 உலக தொழில்அதிபர்கள் ஒன்றிணைந்து தொழில்துறையில் மாசு இல்லாத, சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த, நம்பகத்தன்மை மிக்க புதிய தொழில்நுட்ப சூழலை உருவாக்க முதலீடு செய்ய இருக்கின்றனர்.
இந்த திட்டத்தில் அமெரிக்கா, சீனா, இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளும் கைகோர்க்க இருக்கின்றன. எனினும், இவற்றிற்காக எவ்வளவு முதலீடு செய்ய இருக்கின்றனர் என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்த அமைப்பு பற்றிய முழு அறிவிப்பும், பருவநிலை உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா ‘மிஷன் இனவேஷன்’ (Mission Innovation) பற்றி அறிவிக்கும் போது வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் உலக நாடுகளும், தொழில்நுட்ப நிறுவனங்களும் ஒன்றிணைந்து மாசு இல்லாத, சுத்தமான ஆற்றல் மிக்க சூழலை உருவாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.